மதுரை;
சிவகங்கை மறை மாவட்டத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகளைக் களைய வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு குருபட்டம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கை கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த அருட் சகோதரர் மிக்கேல் ராஜாவிற்கு குருப்பட்டம் வழங்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் சனிக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.
மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் துவங்கிய நடைபயணம் பத்து கி.மீ., பயணம் செய்து கோ.புதுhரில் உள்ள பேராயர் இல்லத்தை அடைந்தது. நடைபயணத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே,சாமுவேல்ராஜ் தலைமை வகித்தார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் த.செல்லக்கண்ணு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், பாலசுப்பிரமணியன், சிவகங்கை மாவட்டத் தலைவர் கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, வாலிபர் சங்க இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் ஆதி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி குணசேகரன், வாலிபர் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் தென்னரசு, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வேல்தேவா, மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.முத்துராணி, தலித் கிறிஸ்தவ கூட்டமைப்பு நிர்வாகிகள் குருபட்டம் மறுக்கப்பட்ட மைக்கேல்ராஜா, அருள்தாஸ், சந்தியாகு, சந்தனமேரி, வேதராஜ், ஜார்ஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்,

நடைபயணத்தைத் தொடர்ந்து அவர்கள் பேராயர் இல்லத்தில் மனு அளித்தனர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய கத்தோலிக்க திருச்சபையில் சாதிய பாகுபாடுகள் தீர்க்கப்படாமல் தொடர்கிறது. திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படும் சாதியப் பாகுபாடுகளில் உச்சக்கட்டத்தை சிவகங்கை கத்தோலிக்க மறை மாவட்டம் தொட்டுள்ளது. 1987-ஆம் ஆண்டு மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து சிவகங்கை மறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மறை மாவட்டம் இராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிச் செயல்படுகிறது. சாதியற்றது கிறிஸ்தவம். காரணம், சாதிய சித்தாந்தத்தை கிறிஸ்தவம் ஏற்கவில்லை. ஆனால், கிறிஸ்தவத்திற்குள்ளும் சாதி அமைப்பு ஊடுருவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மறை மாவட்டத்தில் 25.23 சதவீதம் ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர். இவர்கள் மீது எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு கிறிஸ்தவத்திற்கு விரோதமாக சாதியப் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

திருச்சபையின் பெரும்பாலான செயல்பாட்டை சாதி தான் தீர்மானிக்கிறது என்பதை 2017-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தலைமையில் நடைபெற்ற பொது விசாரணை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இந்த பொது விசாரணை அறிக்கை விபரத்தின்படி கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள் வாழும் கிராமங்களில் தனித் தனியே இரண்டு தேவாலயங்கள், தனித்தனி திருவிழாக்கள், தேர் பவனி தலித் கிறிஸ்தவர்கள் பகுதிகளில் வருவதற்குத் தடை, திருவிழா வரி வசூலில் பாகுபாடு, பலி பீட சேவை மறுப்பு, திருப்பலியில் பாகுபாடு எனத் தொடங்கி இரண்டு கல்லறைகளில் நிறைவடைகிறது.

திருச்சபை நடத்துகிற பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள், மருத்துவமனைகள் இவையெல்லாம் உயர் சாதிக் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. திருச்சபை நடத்துகிற மேற்படி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளையும் சாதியே தீர்மானிக்கிறது. தீண்டாமைப் பாகுபாட்டின் உச்சக்கட்டமாக தேவ அழைப்பிலும் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்குஉதாரணம் அருட்சகோதரர் மைக்கேல் ராஜாவுக்கு குரு பட்டம் வழங்க மறுக்கப்படுவது.

திருச்சிராப்பள்ளி குருத்துவக் கல்லுரியில் 11 ஆண்டுகள் குருத்துவ மாணவராக இறையியல் படிப்பை நிறைவு செய்தவர் அவர்.2011-ஆம் ஆண்டு இறுதியாண்டு இறையியல் படிப்பை மைக்கேல் ராஜா நிறைவு செய்யும் தருணத்தில் வெளியேற்றப்பட்டுள்ளார். 13.8.2011 அன்று புதிதாகச் சேர்ந்த குருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குரு மடத்திற்குச் சொந்தமான மைக்ரோ போன் ஒன்று தண்ணீர் தொட்டியில் எறியப்பட்டுள்ளது. இதை காரணமாக்கி அருட்சகோதரர் மைக்கேல் ராஜா உட்பட ஆறு பேர் குருத்துவக் கல்லுhரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட ஆறு பேரில் ஒருவரான துhத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த குருத்துவ மாணவர் ரெக்ஸ்டன் மைக்ரோ போனை தண்ணீர் தொட்டியில் எறிந்தது தாம் தான் என்றும் இதர மாணவர்களுக்கு இதில் தொடர்பில்லை என்றும் எழுத்துப்பூர்வமாக தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மீது நடத்தப்பட்ட விசாரணைகளிலும் மைக்கேல் ராஜா குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 31.1.2012-இல் 41 கத்தோலிக்க குருக்கள் குற்றமற்ற ஐந்து குரு மாணவர்களையும் மீண்டும் குருத்துவக் கல்லூரியில் அனுமதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். இதையடுத்து 2012-ஆம் ஆண்டு அருட்சகோதரர் மைக்கேல் ராஜா இறையியல் படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டு அவர் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.

ஆனால், 2012-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அருட்சகோதரர் மைக்கேல் ராஜாவுக்கு சிவகங்கை மறை மாவட்டத்தில் குருப்பட்டம் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மறை மாவட்டத்தில் மைக்கேல் ராஜாவின் சமூகத்தைச் சார்ந்த 14 பேர் குரு மடத்திலிருந்து இறையியல் கல்வியை முடிக்கும் தருவாயில் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி வெளியேற்றப்பட்டுள்ளனர். 30 வருடங்களைக் கடந்த பின்பும் 25.23 சதவீதமாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமூகத்திலிருந்து ஒருவருக்குக் கூட குருப்பட்டம் வழங்கப்படவில்லை. இதனை தற்செயல் நிகழ்வாகக் கருதிக்கொள்ள இயலாது. திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கு குருப்பட்டம் மறுக்கப்பட்டது உறுதிசெய்யப்படுகிறது.

சிவகங்கை மறை மாவட்டத்தின் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் மைக்கேல் ராஜாவிற்கு குருப்பட்டம் வழங்க வலியுறுத்தியும் 2012-ஆம் ஆண்டு முதல் இடைவிடாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் வேண்டுதல்கள் செய்துவருகிறார்கள். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மைக்கேல் ராஜாவிற்கு குருபட்டம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நடைபயணம் மேற்கொண்டவர்கள் பேராயர் இல்லம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். உயர் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பாப்புசாமி இல்லத்தில் இல்லாததால் அருள் என்பவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி வருமாறு அந்தோணி பாப்புசாமி அழைப்புவிடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.