புதுதில்லி;
உலகின் மிக வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என மதிப்பிடப்படும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்த வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.சுமார் 2 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய இந்தியப் பொருளாதாரம் அண்மையில் பிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கான பட்டியலில் 6-ஆவது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.4 சதவிகிதமும், அடுத்த 2019-20 நிதியாண்டில் 7.6 சதவிகிதமும் வளர்ச்சி காணும் எனவும் மதிப்பிடப்பட்டது.
2019-இல் இந்தியாவில் பொதுத் தேர்தல் வரவிருப்பதால் அரசின் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டனர்.

இந்நிலையில், ராய்ட்டர்ஸ் நிறுவனம் சார்பாக ஜூலை 19 முதல் 24 வரையில் 70 பொருளாதார வல்லுநர்களிடையே கருத்துக் கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி சற்று சவாலான ஒன்றாகவே இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மத்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வில் பங்கேற்ற 60 சதவிகிதப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.