சென்னை,
2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனையில் உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள மூன்று அனல் மின்நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளின் மீது பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தும் விதமாக 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இக்கோரிக்கையின் மீது பேச்சு வார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். வடசென்னை அனல் மின்நிலையம் அலகு 1 மற்றும் அலகு 2, மேட்டூர் அனல் மின்நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகிய மூன்று அனல் மின் நிலையங்களில் 3000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 வழங்க வேண்டும். மின்நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொழிற் சாலை சட்டத்தின் சொல்லப்பட்ட அடிப்படையில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

மின்நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஈ.பி.எப்க்கான சந்தா தொகையை பிடித்தம் செய்து அவரவர் கணக்கில் செலுத்த வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்திடம் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும், இயக்கங் கள் நடத்தியும், வாரியத்தின் கவனத்தை ஈர்த்த போதும் அக்கோரிக்கைகள் மீது தீர்வு காணாத நிலையே உள்ளதால், வேறு வழியின்றி ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை 30, 31 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, தமிழ்நாடு மின்சார வாரிய செயலாளர் இக்கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்து மேற்கூறிய கோரிக்கைகள் மீது பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: