ஈரோடு,
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 20 வருவாய்துறை சான்றிதழ்களை தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளிக்கல்லூரிசான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், கடன் கொடுப்போர் உரிமம், இதரபிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் வகுப்பு சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், சாதிசான்றிதழ், பிறப்பிட, இருப்பிட சான்றிதழ், முதல்பட்டதாரி சான்றிதழ், கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 20 சேவைகளையும் தற்போது பொதுமக்கள் தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விண்ணபிக்க f www.tnesevai.tn.gov.in/Citizen என்ற இணையதள முகவரியை அணுகலாம். மேலும் யுஎம்எஎன்ஜி என்னும் ஆன்ராய்டு செயலி மூலமாகவும் பொதுமக்கள் வருமானவரி சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட அல்லது இருப்பிட சான்றிதழ் ஆகிய மூன்று சான்றிதழ்களையும் தங்கள் கைப்பேசி மூலமாக விண்ணப்பித்து பெறலாம். இதற்கான சேவை கட்டணமாக ரூ.60 இணையதள வங்கிமுறை அல்லது கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம். இந்த புதிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு தேவைப்படும் சான்றுகளை பெற்றுக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.