சிவகாசி;
டீசல் விலை உயர்வு, சுங்கச் சாவடி கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஒரு வார காலமாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவகாசியில் பல கோடி ரூபாய் பெறுமான பட்டாசுகள் தேங்கி கிடக்கின்றன.

டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் 8 ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்து வருகிறது.
சிவகாசி பகுதியில் சுமார் 900 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு, நாள்தோறும் 8 முதல் 9 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 7 நாட்களாக தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 63 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு உற்பத்தி தற்போது வேகமடைந்து வருகிறது. இந்நிலையில், லாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு தினங்களில் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விற்பனை செய்ய முடியாவிட்டால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது. மேலும் மூலப் பொருட்கள் வாங்க முடியாது. இதனால், உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மத்திய – மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.