தில்லி:
பிரதமர் வீட்டின் மின்சாரக் கட்டணம் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பிரதமர் வீட்டில் மீட்டர் பெட்டியே இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, நாட்டில் மின்சார செலவைத் தடுக்க எல்இடி பல்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் எல்இடி பல்புகளுக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் உள்ள மின்சார விளக்குகள் எல்இடி பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்றும் வெளியானது.
இதனைக் கண்ட குர்காவன் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகதீஷ், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம், பிரதமர் வீட்டின் மின்சார செலவு குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார்.

சாதாரண விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றும் திட்டம் பிரதமர் வீட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளதா? என்றும், அப்படியென்றால், அதற்கான செலவு என்ன? கடந்த காலத்தை விட பிரதமர் இல்லத்தின் மின்சாரச் செலவு எந்தளவிற்கு குறைந்துள்ளது? என்று கேள்விகளை எழுப்பி இருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு மத்திய பொதுப்பணித்துறை தற்போது பதிலளித்துள்ளது. அதில், ‘பிரதமர் வீட்டுக்கு என தனியாக மின்சார மீட்டர் கிடையாது; நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் பிரதமர் வீடு உள்ளிட்ட அரசு கட்டடங்களின் பராமரிப்புப் பணிகளை மத்திய பொதுப்பணித்துறைதான் மேற்கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளது.அத்துடன், ‘பிரதமர் இல்லத்தில் சாதாரண மின்சார விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டதற்கான செலவு எவ்வளவு? என்ற கேள்விக்கு, ‘தற்போதைக்கு பதில் தயாராக இல்லை’ என்றும் மத்திய பொதுப்பணித்துறை மழுப்பியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.