திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் அருண். அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பழங்குடி (இருளர்) சமூகத்தை சேர்ந்தவர். இவரின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

புதன்கிழமையன்று (ஜூலை 25) பள்ளிக்கு சென்ற அருண், சக மாணவருடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் மாணவனைக் கண்டித்து வகுப்பறை செல்லுமாறு கூறிவிட்டு சென்றிருக்கிறார். பிறகும், மாணவர் மீண்டும் விளையாடியதைக் கண்ட தலைமை ஆசிரியர் அருணை கடுமையாக தாக்கியதோடு, முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். பிறகு மாணவனின் தகப்பனாரை பள்ளிக்கு வரவழைத்து, “உனது மகன் மதிப்பதில்லை. எனவே, அவனுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்தால் தான், மற்ற மாணவர்களுக்கு புத்தி வரும்” என்று சொல்லியதோடு, மாணவன் அருணுக்கு மாற்றுச் சான்று வழங்கி பள்ளியை விட்டு விரட்டியுள்ளார். மேலும், உடனிருந்த பாண்டுரங்கன் எனும் ஆசிரியர் மாணவனை பார்த்து, ‘உனக்கெல்லாம் எதுக்குடா படிப்பு, நீ எலி புடிக்கத்தான் லாயக்கு’ என்று இழிவுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவனின் பெற் றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பழங்குடியினர் சமூகத்தில் வறுமை, சாதிச் சான்று இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதே மிகவும் குறைவு. படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களை இப்படி ஆசிரியர்களே அவமானப்படுத்தி, பள்ளியை விட்டு விரட்டி விடுவது வன்கொடுமையின் உச்சமாகும். எனவே, உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவனை அதே பள்ளியில் மீண்டும் படிப்பைத் தொடரச் செய்ய வேண்டும், மாணவனை கடுமையாகத் தாக்கி மாற்றுச் சான்று வழங்கிய தலைமை ஆசிரியர் மங்கவரதாள் மற்றும் சாதியைச் சொல்லி இழிவுபடுத்திய ஆசிரியர் பாண்டுரங்கன் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் காவல்துறை கண் காணிப்பாளர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வழக்கறிஞர் அபிராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குமரேசன், வட்டச் செயலாளர் ஜா. வே. சிவராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

கண்டனம்:
கீழ்க்கொடுங்காலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன் அருண் என்பவர் மீது சாதி ரீதியான அவமதிப்பு செய்து மாணவனை தாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சாதி ரீதியாக செயல்படும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை போக்கும் விதமாக கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

-ந.நி

Leave A Reply

%d bloggers like this: