திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக வெள்ளியன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி நெகிழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி சிக்கண்ணா கல்லூரி வளாகத்திலிருந்து, அதே கல்லூரி சாலையிலுள்ள செளடாம்பிகா திருமண மண்டபம் வரை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இராமையா தலைமை வகித்தார். இந்த பேரணியில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். விழாவில் காவல் துணை ஆணையர் (நிர்வாகம்) பிரபாகரன் சிறப்புரையாற்றி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் புதுமையாக பொது மக்கள் நெகிழியை பயன் படுத்தக் கூடாது என்பதற்காக கண்களை கறுப்பு பட்டையால் கட்டி நெகிழி அரக்கன் போன்று மாறு வேடமிட்டு சென்றனர்.  மேலும், மாணவர்கள் அப்துல்கலாம் உருவத்தை முகமூடியாக அணிந்தும் நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம், சுற்றுப்புறத்தை காப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியில் வாழை இலையையும் துணிப்பையையும் கையில் ஏந்தி சென்றனர்.

முன்னதாக காவல் துணை ஆணையாளர், கல்லூரி முதல்வரும் இணைந்து கடைகளில் நெகிழியை பயன்படுத்த வேண்டாம் என்றும், கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு துணிப்பையோடு வாருங்கள் என்று வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை அறிமுகப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் மாணவர்கள், மற்றும் முன்னாள் மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.