நாகர்கோவில்:
மத்திய அரசு முன்மொழிந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சனியன்று (ஜுலை 28) தமிழகம் முழுவதும் உள்ள 4ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனைகள் 12 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியாவில் மருத்துவக் கல்வித்துறையை ஒழுங்காற்று செய்கிற அமைப்பாக இந்திய மருத்துவ கவுன்சில்(எம்சிஐ) உள்ளது.

மருத்துவக் கல்வியை முற்றாக பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் மோடி அரசு, இந்திய மருத்துவக் கவுன்சிலை கலைத்துவிட்டு புதிய ஒரு அமைப்பை உருவாக்க வழி செய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2017 – ஐ உருவாக்கி, வியாழனன்று மக்களவையில் அறிமுகம் செய்துள்ளது. மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா அறிமுகப்படுத்தும்போதே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த மசோதா, மருத்துவ கல்வியில் இளநிலை படிப்பு, முதுநிலைப் படிப்பு, மருத்துவக் கல்வி நிலையங்களை மதிப்பீடு செய்து தர நிர்ணயம் வழங்குதல் மற்றும் மருத்துவர்கள் பதிவு ஆகிய நான்கு வெவ்வேறு துறைகளுக்காக வெவ்வேறு தன்னாட்சி அதிகாரம் கொண்ட வாரியங்களை அமைக்கவும், அந்த வாரியங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின்கீழ் இயங்கவும் வகை செய்கிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசு நியமனம் செய்யும்; தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியங்களின் உறுப்பினர்களை மத்திய சுகாதாரச் செயலாளர் தலைமையிலான தெரிவுக்குழு தேர்வு செய்து நியமிக்கும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐஎம்ஏ) தமிழக தலைவர் டாக்டர் ஜெயலால் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் ஜனநாயக மரபிற்கு எதிரானது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்காது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினால் ஏழை, நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இந்த மசோதாவைக் கைவிடக்கோரி அரசிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, இம்மசோதாவை கைவிடக்கோரி இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, ஜூலை 28ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணிநேர வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் 4ஆயிரத்து 500 தனியார் மருத்துவமனைகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. 34 ஆயிரம் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள். இந்த போராட்டத்தின் போது உள்நோயாளிகளை தவிர புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது.

அவசர கால சிகிச்சை, பிரசவம் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படும். அவசரமில்லாத ஆபரேசன்கள் நடைபெறாது. நாளை காலை 9 மணிக்கு இந்திய மருத்துவ சங்க கிளைகளின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில், அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.