தீக்கதிர்

கோவா மாநில பாடப்புத்தகத்தில் நேரு படத்தை நீக்கிவிட்டு சாவர்க்கர் படம்…!

பனாஜி:
கோவா மாநில 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு-வின் படம் நீக்கப்பட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். பேர்வழியும், இந்துத்துவா அழிவுச் சிந்தனைக்கு சொந்தக்காரருமான வி.டி. சாவர்க்கர் படம் சேர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த பாடப்புத்தகத்தின் 68-ஆவது பக்கத்தில் மகாராஷ்டிரம் வார்தாவில் உள்ள சேவாகிரம் ஆசிரமத்தில் 1935-ஆம் ஆண்டு பண்டித நேரு, மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத் ஆகியோர் சேர்ந்து அமர்ந்திருக்கும் படமே இருந்தது. நேருவின் 2 புகைப்படங்கள் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது 2 படங்களும் நீக்கப்பட்டுள்ளன.
மாறாக, வி.டி. சாவர்க்கரின் படத்தைப் போட்டு, படத்தின் கீழ் ‘விநாயக் சவர்க்கர் ஒரு புரட்சியாளர்’ என்று கோவா மாநில பாஜக அரசு குறிப்பு வைத்துள்ளது.

உண்மையில், பிரிட்டிஷ் மகாரணியிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்தான் வி.டி. சாவர்க்கர். காந்தியை படுகொலை செய்த நாதுராம் விநாயக் கோட்ஷே-வின் குருநாதர். காந்தி படுகொலையிலும் கூட வி.டி. சாவர்க்கரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இப்படிப்பட்ட ஒருவரின் படத்தை- அதுவும் நேரு படத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வைத்திருப்பது, தற்போது கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நேரு புகைப்படம் நீக்கப்பட்டதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.