நாமக்கல்,
கூட்டுறவு தேர்தல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாமக்கல்லில் ஜூலை 26, 27 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற மாநிலக்குழு கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் கே.வரதராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாநில பொருளாளர் திருப்பதி பெருமாள் உட்பட மாநிலம் முழுவதும் இருந்து மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை அமைக்க சட்டத்திற்கு விரோதமான முறைகளை கையாண்டு தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது. நில உரிமையாளர்களான விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களில் அத்துமீறி நுழைவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், மனை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள், பள்ளிக் கூடங்கள், பல கிராமங்கள் என பேரழிவை ஏற்படுத்தி இந்த சாலை அமைக்கப்படுவதை எவரும் ஏற்க மாட்டார்கள். எனவே, சேலம் – சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும்.

இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்குக!
தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாக பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நிரம்பியுள்ள நிலையில், அங்கு கேட்க முடியாத உபரி தண்ணீர் அப்படியே திறக்கப்படுவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வரும் உபரி தண்ணீரை அப்படியே காவிரியில் திறக்கப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 15க்கு பிறகு தான் நாற்றுவிடும் நிலையில் உள்ள சூழ்நிலையில் தற்போது உள்ள 700க்கும் மேற்பட்ட பாசன ஏரிகள், குளங்களை தூர்வார பொதுப்பணித்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடை பகுதிகளுக்கு இந்த ஆண்டு தண்ணீர் கொண்டு செல்வதை பொதுப்பணித்துறை உத்தரவாதப்படுத்த வேண்டும். காவிரி பாசன பகுதிகளில் ஒரே நேரத்தில் சாகுபடி பணிகள் நடைபெற உள்ளதால், விவசாயிகள் பணிகளுக்கான இடுபொருட்கள் உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால் பொதுப்பணி,வேளாண்மை, கூட்டுறவு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவேண்டும்.

கூட்டுறவுத்தேர்தல்;
கூட்டுறவு வங்கிகள் வணிக வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு தேர்தல் வழக்கை முடித்து கூட்டமைப்பு ஜனநாயக வழியில் செயல் பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் நடைபெறாததால் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் புதிய கடன் பெற முடியாமலும் விற்க முடியாமலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முடியாமலும் விவசாயிகள் கடன் பெறுபவருக்கு மத்திய கூட்டுறவு சங்க கிளைகளை நாடி இருக்க வேண்டி உள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். குரங்கணி தீ விபத்தில் அதுல்ய மிஸ்ரா விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தீ விபத்திற்கு வனத்துறையினரின் அலட்சியம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி வனத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.