தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய்க் கரையில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி, நூற்றுக்கணக்கான விவசாயிகள் உதவியுடன் வியாழனன்று இரவு முதல் விடிய விடிய நடைபெற்றது.

மேட்டூர் அணை நிரம்பியதால், அங்கிருந்து வெளியேற்றப்பட்டும் அதிக அளவு நீர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்கிறது. கல்லணைக்கு வரும் நீர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்பட்டு, தற்போது கடைமடை பகுதிகளை சென்றடைந்து வருகிறது.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், தஞ்சாவூரை அடுத்த பூதலூர் அருகில் உள்ள கல்விராயன்பேட்டையில் கல்லணைக் கால்வாயின் தென் கரையில் வியாழனன்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டது.

தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் உடைப்பிலிருந்து வெளியேறிய தண்ணீர், அருகில் உள்ள வயல்களில் நிரம்பி, கள்ளப்பெரம்பூர் ஏரி, வெண்ணாற்றில் வழிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகளும், பொதுப்பணித்துறையினரும் டிப்பர் லாரிகள் மூலம் மண்ணைக் கொட்டி உடைப்பை சரிசெய்ய முயன்றனர். ஆனால், உடைப்பின் அளவு பெரிதாகிக் கொண்டே இருந்ததாலும், தண்ணீரின் வேகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததாலும் அடைக்க இயலாமல் தவித்தனர். இதையடுத்து, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, கரை உடைப்பை அடைக்கும் பணி மீண்டும் முழுவீச்சில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார், வல்லம் டி.எஸ்.பி.ஜெயசந்திரன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் இரவு அங்கேயே முகாமிட்டு நிலைமையை கண்காணித்தனர். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, கரை உடைப்பை பார்வையிட்டு, “நாளை (வெள்ளி) மாலைக்குள் உடைப்பு சரிசெய்யப்பட்டுவிடும். மீண்டும் தண்ணீர் திறப்பது பற்றி பொதுப்பணித்துறை அலுவலர்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.

வியாழனன்று இரவு முதல் விடிய விடிய கரை உடைப்பு பணி மும்முரமாக நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுடன், தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் பணியில் ஈடுபட்டனர். கரை உடைப்பு அருகே சவுக்கு கட்டைகளை அடித்து, அதனிடையே மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை அடைக்கும் பணி நடந்தது. வெள்ளியன்று காலையிலும் தொடர்ந்து பணிகள் நடந்தன. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் , டிராக்டர்கள், பொக்லைன் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளியன்று காலை நிலவரப்படி கல்லணைக்கு வினாடிக்கு 29,115 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அங்கிருந்து காவிரியில் 9,029, வெண்ணாற்றில் 9,016, கொள்ளிடம் ஆற்றில் 11,070 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.