கோவை,
எட்டாவது நாளாக லாரிகள்வேலை நிறுத்தத்தால் கோவை மற்றும் ஈரோட்டில் உற்பத்தி பொருட்கள் முடங்கி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நாடுமுழுவதும் ஜூலை 20 ஆம் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளியன்று எட்டாவது நாளாக போராட்டம் நீடிப்பதால் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, கோவையிலுள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதியில் இருந்துதான் வருகிறது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் அங்கேயே தேங்கியுள்ளன. இதேபோல் உற்பத்தியான பொருட்களையும் வெளியே எடுத்துச் செல்ல முடியாத நிலையினால் வர்த்தக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பணிகள் அனைத்தும் முடங்கி தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, லாரி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வெள்ளியன்று கண்டெய்னர் லாரிகளும் வேலை நிறுத்ததை அறிவித்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதிக்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல் இன்னும் ஒரு வாரத்
திற்கு வேலை நிறுத்தம் நீடித்தால் அனைவரும் வேலையிழப்பது மட்டுமல்லாமல் உற்பத்தியின்றி நிறுவனத்தையே மூடும்நிலை ஏற்படும் என கோவை தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 5 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் சுமார் ரூ.350கோடி வரை வர்த்தகம் முடங்கியுள்ளது. புடவை, துணிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் லாரி முன்பதிவு அலுவலகங்கள் மற்றும் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளது. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோட்டில் பிரதான தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளிகள், மஞ்சள், எண்ணெய் வித்துக்கள் காய்கறிகள் போன்ற தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  மேலும், ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச் சந்தைக்கு மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மேற்குவங்காளம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வியாழனன்று நடந்தமாட்டுச் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாட்டுச் சந்தை களையிழந்து காணப்பட்டது. வியாபாரமும் பாதியாக குறைந்தது.இதுகுறித்து மாட்டு சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது:- கடந்த 2 வாரமாக மழை காரணமாக வெளிமாநில வியாபாரிகள் அதிகம் வரவில்லை. இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக இவ்வார சந்தைக்கு குஜராத், கர்நாடகா, மேற்கு வங்காளம் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதன் காரணமாக ரூ.3 கோடி வரை மாட்டுச்சந்தையில் விற்பனை நடந்து வந்த நிலையில், தற்பொழுது ஒருகோடி ரூபாய்மட்டுமே மாடுகள்விற்பனையானதால் ரூ.2 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை
லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பருத்தி, மஞ்சள், முட்டை, உரங்கள், தானியங்கள், உலோகபொருட்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு பொருட்களும் ஏற்ற முடியாமல் தேக்க நிலையில் உள்ளது. இதனால் இதனை நம்பி வாழும் ஓட்டுநர்கள், சுமைப்பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையான நெருக்கடி நிலையை சந்தித்து வருகின்றனர். ஆகவே, இப்பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளன தலைவர் எஸ்.குணசேகரன், பொதுசெயலாளர் ஆர்.வெங்கடபதி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.