===ஆர். அருண்குமார்====
நிதி மூலதனத்தின் தாக்கத்தின் காரணமாக நகர்ப்புறங்களில் உற்பத்தி துறை சார்ந்த தொழில்கள் குறைந்து, சேவைத்துறை சார்ந்த செயல்பாடுகள் பெருகியுள்ளன. இதனால் சமூக, கலாச்சார ரீதியான மாற்றங்கள் பெருமளவு நடந்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் பெரும்பகுதியினர் குடிசைவாழ் மக்களாகவும், மத்தியதர வர்க்கத்தினராகவும் உள்ளனர். சுமார் 37 சதமான மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். குடிசைப் பகுதிகள், முன்பு தொழிலாளர் குடியிருப்புகளாக இருந்தன. அப்பகுதிகளையும் அரசு பராமரித்து வந்தது. தற்போது அதில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. நகர்ப்புற பிரச்சனைகளை கையாள அங்கு வசிக்கும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதுடன், நகர்ப்புறங்களை ஒட்டி நடைபெறும் மாற்றங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்தியதர வர்க்கம்
நிதி மூலதனத்தின் பரவலால் உற்பத்தி சார்ந்த பணிகளில் மத்திய தர வர்க்கத்தினர் இல்லை; அதே வேளை மத்திய தர வர்க்கத்தினருக்கு வாங்கும் சக்தி கூடுதலாக இருக்கிறது. இந்த இரண்டின் காரணமாகவும் அவர்களை தொழிலாளர்களாக கருதுவதில்லை. ஆனால் மார்க்ஸ், மூலதனத்தில் உபரி மதிப்பு பற்றி விளக்கும்போது அவர் தொழிலாளர்களை உதாரணமாக கொள்ளாமல், ஒரு ஆசிரியரை உதாரணமாக கொண்டு உபரி மதிப்பை விளக்கினார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்தியதர வர்க்கத்தினரை எப்படித் திரட்டுவது?
கடலூர் மாவட்டத்தில், குடியிருப்பு நலச்சங்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பொங்கல் விழா போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவது, குழந்தைகளுக்கு அறிவியல் கல்வி வழங்குவது, வரி உயர்வுக்கு எதிராக தலையீடு செய்வது என மத்தியதர பகுதி மக்களை திரட்டினர்.

மாறுபட்ட சிந்தனையும் கோரிக்கைகளும்
உள்ளாட்சி அமைப்புகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்க வலியுறுத்துகின்றன. இதை மத்தியதர பகுதியை சேர்ந்தவர்கள் ஆதரிக்கின்றனர். இந்தமுறையில் குப்பையை பிரித்து வழங்காத மத்திய தர வர்க்கம், அதற்காக கட்டணம் வசூலித்தால் அதனை செலுத்த தயாராக உள்ளது. ஆனால் குடிசைப் பகுதி மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதற்கான சூழலும், கட்டணம் செலுத்தும் வசதியும் இல்லை. எனவே இதை எளிய மக்கள் எதிர்ப்பார்கள்.

இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் போது மத்தியதர பகுதியை திரட்டுவது சாத்தியமாகாது; எதிர்மறையான கருத்துகூட உருவாக்கும். எனவே குடிசை பகுதி மக்களுக்கான இயக்கத்தையும், மத்தியதர பகுதி மக்களுக்கான இயக்கத்தையும் தனித்தனியாக திட்டமிட வேண்டும். குடிசைப் பகுதியில் பணியாற்றும் போது முறைசாரா தொழிலாளர்களை திரட்டவும், தொழிலாளர்களை ஒரே இடத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியினராக உள்ள குடிசைப் பகுதி மக்களை திரட்டுவதுதான் முதல் இலக்கு. அடுத்தது மத்தியதர வர்க்கம். இந்த இரு தரப்பினரையும் திரட்டிட தனித்தனி அமைப்புகளை உருவாக்க வேண்டும். தெலுங்கானாவில் பட்டணம் என்கிற அமைப்பை உருவாக்கி அதில் மத்தியதர வர்க்கத்தினருக்கு ஒரு பிரிவையும், குடிசைப் பகுதி மக்களுக்கு மற்றொரு பிரிவையும் வைத்துள்ளனர். ஹைதராபாத்தில் பட்டணம் என்கிற அமைப்பையும், கூடுதலாக ஹைதராபாத் சங்கமம் என்றும் உருவாக்கி, அதில் பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், உயர் மத்தியதர வகுப்பினரை திரட்டியுள்ளனர். இவர்கள் நகர்ப்புற வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கைகள், சுற்றுச்சூழல், சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் கருத்தரங்கங்கள் நடத்துவது போன்றவைகளை செய்து ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்து வருகின்றனர்.

ஒற்றுமையை முன்னிறுத்துவோம்!
நவீன தாராளமயமும், பின் நவீனத்துவமும் சமூகத்தை பல்வேறு வகைகளில் பிரித்து ஆளுகிறது. தலித் என்றும், அதற்குள் பல்வேறு பிரிவுகளையும், தொழில்களுக்குள்ளாகவே பல்வேறு படிநிலைகளையும் உருவாக்குகிறது. இவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. பிரிவினைகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறவர்களுக்கு மாற்றாக, அனைவரையும் ஒன்றிணைக்கும் செயல்பாட்டின் மூலம் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. வேறுபாடுகளை அவர்கள் பெரிதாக்கி, பொது எதிரியை எதிர்த்த போரட்டத்தை சிதைக்கின்றனர். நாம் வேறுபாடுகளை அங்கீகரித்து அவர்களுக்கான கோரிக்கைகளோடு, பொதுக்கோரிக்கைகளையும் முன்வைத்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி
நகரங்களை திறன்மிகு நகரங்களாக (ஸ்மார்ட் சிட்டி) மாற்ற இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சில நகரங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காலத்தில் உள்ளாட்சிகளை சிறப்பு அதிகாரிகள் கவனித்துக் கொள்கின்றனர். அதைவிட கூடுதல் அதிகாரத்தோடு ஸ்மார்ட் சிட்டியில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களிடம் நகரங்கள் ஒப்படைக்கப்படும். சுருக்கமாக சொல்வதென்றால், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளுக்கு ஸ்மார்ட் சிட்டியில் எந்த அதிகாரமும் இருக்காது.

உலக வங்கியும், சர்வதேச மூலதனமும் ஸ்மார்ட் சிட்டிகளுக்கு தேவையான நிதியை வழங்குகின்றன. டெல்லி ஸ்மார்ட் சிட்டி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் டெல்லி முழுமையும் அதற்குள் வராது. டெல்லியில் உள்ள கிழக்கு கிட்வாய் நகர் மட்டுமே அதில் வரும். அந்தப் பகுதியில் பல்வேறு வகையான வசதிகள் செய்து தரப்படும். அவை அனைத்திற்கும் மக்களிடம் பணம் வசூலிக்கப்படும். இந்த வசதிகளை மற்ற பகுதி மக்கள் பெற வேண்டுமென்றால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கான தந்திரமே இந்தி ஸ்மார்ட் சிட்டிகள் திட்டம்.

தாராளமயத்தின் தொடர்ச்சியே நகர்மயமாதல்
புதிய பொருளாதாரக் கொள்கை 1992ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே நகர்ப்புற மேம்பாட்டிற்கான திட்டமிடல் 1994ம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே ராஜீவ்காந்தி நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. நகர்ப்புறங்களில் மட்டும் சுமார் ஒரு கோடிப் பேர் வீடின்றி உள்ளனர். 2021க்குள் அனைவருக்கும் வீடு என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். வீடில்லாதவர்களுக்கு, முன்பு அரசு வீடுகட்டி கொடுத்தது. ஏழை மக்களுக்கு மட்டுமே வீடு வழங்கும் திட்டம் இருந்தது. இன்று இத்திட்டங்களின் பேரில் அனைவருக்கும் வங்கி கடன் கொடுக்கப்படுகிறது.

ஏனெனில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வீழ்ச்சியால் நகர்ப்புறங்களில் மட்டும் 8 கோடி வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. ரியல் எஸ்டேட் முதலாளிகளின் லாபத்திற்காகவே இத்தகைய கடன்கள் வழங்க பொதுத்துறை வங்கிகள் நிர்பந்திக்கப்படுகின்றன. எனவே, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் பேரில் வழங்கப்படும் கடன்களை எதிர்க்க வேண்டுமா? அது எதிர்மறையான கருத்தையே உருவாக்கும். அரசு ஏன் வீடு கட்டி கொடுக்கவில்லை? ஏன் தனியாரிடம் கொடுக்கிறது? என்று கேள்வி எழுப்பலாம். வீடு கட்டிக்கொடுத்த தனியார் நிறுவனமே, அந்த குடியிருப்புகளை குறிப்பிட்ட காலம் வரை பராமரிக்க வேண்டும் என்று குடியிருப்பு நலச்சங்கங்கள் மூலம் கோரிக்கை வைக்கலாம். இப்படியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியை எவரும் எதிர்க்கவில்லை. மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லாத வகையில் வளர்ச்சி, வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும். சென்னையில் ஸ்மார்ட் சிட்டிக்காக இரண்டு மரங்கள் வெட்டப்பட்டபோதும், டெல்லியில் 17,000 மரங்களை வெட்டிவிட்டு அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பை கட்ட முயன்றபோதும் மக்கள் எதிர்த்தனர். மக்களுக்கு வளர்ச்சியும் வேண்டும்; அதேநேரத்தில் சுற்றுச்சூழலும் பாதுகாக்க வேண்டும் என்கிற அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

எங்கெங்கும் மக்களே உள்ளனர்
லெனின் சொல்வது போல் “மக்கள் இல்லை என்கிறோம், ஆனால் எங்கெங்கும் மக்களே உள்ளனர்”. கோரிக்கைகளின் பின்னால் மக்களை திரட்ட வேண்டும். நாம் உருவாக்கும் கோரிக்கை மக்களுக்கான கோரிக்கைதான். அந்த கோரிக்கையின்பால் திரளும் மக்களிடமிருந்து ஊழியர்களை கண்டறிய முடியும். புதிய பகுதிகளிலிருந்து மக்களை திரட்டும்போதுதான் புதிய ஊழியர்கள் கிடைப்பார்கள்.

நகர்ப்புற வளர்ச்சிக்குழு என்பது புதிய பகுதிகளிலிருந்து வெகுஜன மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வழியாகும். இதை நமது வர்க்க வெகுஜன ஸ்தாபனத்தில் உள்ள ஊழியர்களை கொண்டு முதலில் உருவாக்க வேண்டும். பிறகு, திரட்டாத பெரும் பகுதி மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் அதை விரிவுப்படுத்த வேண்டும்.

குடியிருப்பு பகுதிகளில் கோரிக்கைகளுக்கான பிரச்சாரத்திற்கு செல்லும்போது, கூலி உயர்வு போராட்டம் நமது வீட்டு வாடகையோடு சம்பந்தபட்டது; நமது அன்றாட செலவுகளுக்கான விலை உயர்வோடு சம்மந்தப்பட்டது என்று தேசிய அளவிலான கோரிக்கைகளை உள்ளூர் அளவிலான பிரச்சனைகளோடு இணைத்து விளக்க வேண்டும். தேசிய அளவிலான ஒரு இயக்கத்திற்கான பிரச்சாரத்தில் உள்ளூர் அளவிலான விஷயத்தையும் இணைக்க வேண்டும்.

(19.07.2018 அன்று சென்னையில் நடைபெற்றமாநில நகர்ப்புற வளர்ச்சிக்குழுவின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அருண்குமார் ஆற்றிய உரையின் சுருக்கம்)

தொகுப்பு மற்றும் தமிழாக்கம்
ச.லெனின்

Leave a Reply

You must be logged in to post a comment.