உடுமலை,
உடுமலையில் சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தும் நகராட்சி நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து உடுமலை தாலுகா பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் 26ம் தேதி வியாழனன்று நகராட்சி அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உடுமலை நகராட்சி பகுதிகளில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோர வியாபாரிகள் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்க பொது தொழிலளார் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் படி சில தொழிலாளர்களுக்கு மட்டும் நகராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்கியது. ஆனால், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் வியாபாரம் செய்பவர்களுக்கு முறையாக அடையாள அட்டை வழங்கப்படவில்லை. மேலும், உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் சைக்கிள் மூலம் பூ வியாபா பாரம் செய்பவர்களை பேருந்து நிலையத்தில் நுழைவதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.  இந்நிலையில், பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு ரூ. ஐம்பதாயிரமும் மற்றும் தினந்தோறும் ரூ. மூன்னூறு தந்தால் தான் பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் சாலையோர வியாபாரிகள் நலனை பாதுகாக்கும் வகையில் 2014ம் ஆண்டு சட்டத்தை முறையாக அமல் படுத்த வேண்டும்.மேலும், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும், நகராட்சி பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வெ. ரங்கநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், உடுமலை சாலையோர வியாபாரிகள் நலக்குழு உறுப்பினர் பாபு, சிஐடியு நிர்வாகிகள் மகாலிங்கம்,ராஜிக்அலி மற்றும் சாலையோர வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: