வாஷிங்டன்/சிட்னி:
ஈரான் மீது அடுத்த மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் அமெரிக்கா திடீரென்று மிகப்பெரும் தாக்குதலை நடத்தக்கூடும் என்று மிரட்டல் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டியிருப்பதாகவும், மிகச் சரியாக ஈரானில் அணுசக்தி மையங்கள் எங்கு உள்ளன என்று அடையாளம் கண்டறிந்து துல்லியமாக தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் ஈரான் மீது மிகப்பெரும் போரை கட்டவிழ்த்துவிடும் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன் முன்னோட்டமாக, ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அமெரிக்கா – ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தின் படி அமலுக்கு வந்த பொருளாதாரத் தடை விலக்கம் என்பது, எதிர்வரும் நவம்பர் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினத்தோடு தடை விலக்கத்தை ரத்து செய்து ஈரான் மீது முழுமையான பொருளாதாரத் தடையை அமலுக்கு கொண்டு வருவோம் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் ஈரானில் அமெரிக்காவைச் சேர்ந்த எந்த நிறுவனமும் வர்த்தகம் செய்யாது; முதலீடுகள் செய்யாது; ஈரானுடன் வர்த்தகமும் முதலீடும் செய்யும் வேறு நிறுவனங்களையும் அனுமதிக்காது. ஈரான் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிற எண்ணெய் ஏற்றுமதி மீது முழுமையான தடைகளை அமெரிக்கா அமல்படுத்தும். இதன் விளைவாக ஈரானிடமிருந்து உலகின் எந்தவொரு நாடும் எண்ணெய்யை இறக்குமதி செய்து கொள்ள முடியாது. இது நடந்தால் ஈரானின் பொருளாதாரம் முற்றாக ஸ்தம்பிக்கும்.இந்த நோக்கத்துடன் டிரம்ப் நிர்வாகம் தடைகளை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் அதை எப்படியும் எதிர்கொள்வது என்ற துணிச்சலுடன் ஈரானும் எதிர்த்து நிற்கிறது. இந்நிலையில், ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்குதலை துவக்கலாமா என்று டிரம்ப் நிர்வாகம் தீவிரமான ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஈரானில் குறிவைக்க வேண்டிய இடங்களை கண்டறியும் வேலையை செய்வதற்காக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருடன் அமெரிக்கா ராணுவ நிர்வாகம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தகவல் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்திருக்கிறது.
இந்த நோக்கத்திற்காக ஐந்து கண்கள் என்று அழைக்கப்படுகிற அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகளது ராணுவ கூட்டணியை அமெரிக்க நிர்வாகம் அணுகியது.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க- ஆஸ்திரேலிய கூட்டு ராணுவத் தளமான ‘பைன் கேப்’ எனுமிடத்தில் ராணுவ உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடந்திருக்கிறது. ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை மிகச் சரியாக இலக்கு வைப்பதற்கு அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்களை பொருத்தமான முறையில் எப்படி திருப்புவது என்பது இவர்களது ஆலோசனையின் முக்கிய அம்சமாகும் என்றும் தெரியவந்துள்ளது.இந்த பணியில் ஆஸ்திரேலியாவின் அதிகம் அறியப்படாத உளவு அமைப்பான ‘ஜியோஸ்பேசியல்’ உளவு நிறுவனம் முக்கியமான பங்கினை ஆற்ற ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது.ஆனால் ஈரான் மீது ராணுவத்தாக்குதல் நடத்துவதில் கனடாவுக்கும் நியூசிலாந்துக்கும் விருப்பம் இல்லை என்பது தெரிகிறது. எனவே இந்த நாடுகள் அத்தகைய திட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்கின்றது.

ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் மிகப்பெரிய தாக்குதலை தொடுக்குமானால், ஈரான் நிச்சயம் பதிலடி கொடுக்கும்; அந்த பதிலடி எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமானதாக இருக்கும்; இது மத்திய கிழக்கு உலகில் அதிபயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் டர்ன்புல் அரசாங்கம் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறது. எனினும் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து செல்ல முடிவு செய்திருப்பதாகவே தெரிகிறது. இத்தகைய தகவல்கள் வெளியான நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஈரானை தொட்டால் அமெரிக்கா தன்னிடம் உள்ள அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் ராணுவத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி எச்சரித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.