மதுரை;
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 242 வழக்குகளையும் ரத்துச் செய்து உத்தரவிடக்கோரிய வழக்கில், 99 நாட்கள் போராட்டம் தொடர்பான உளவுத்துறையின் இரு அறிக்கைகள் சீலிட்ட உறையில் வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மக்கள் ஊர்வலமாகச் சென்றபோது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். போராட்டம் தொடர்பாக சிப்காட் காவல்நிலையத்தில் 142 வழக்குகள், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 100 வழக்குகள் என மொத்தம் 242 வழக்குகள் கூடுதலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் நடந்த ஒரே ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்த நிலையில் அதே போராட்டம் தொடர்பாக மீண்டும் 242 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ள குற்ற வழக்கு எண் 191-ஐ தவிர மற்ற 242 வழக்குகளையும் ரத்துச் செய்து அந்த வழக்குகளை காவல்துறை விசாரிக்கத் தடை விதிக்க வண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம் குறித்த உளவுத்துறை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்தவழக்கு நீதிபதிகள் சிடி.செல்வம், ஏ.எம்.பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான உளவுத்துறை அறிக்கை சீலிட்ட உரைகளில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: