திருநெல்வேலி:
கோவையில் வார்டன் மூலம் பெண்களைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் சிக்கி காவல்துறையால் தேடப்பட்டு வந்த மகளிர் விடுதி உரிமையாளர், நெல்லை ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வருகிறது தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதி. அதன் உரிமையாளரான ஜெகநாதன் சிலதினங்களுக்கு முன்பு விடுதி வார்டன் புனிதா மூலம் அங்கு தங்கியிருக்கும் சில கல்லூரிப் பெண்களைத் தவறாக வழி நடத்த முயன்றதாக சர்ச்சைக்குள் சிக்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் அந்த விடுதியில் தங்கியிருந்த சில கல்லூரி மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற வார்டன் புனிதா, அந்த மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்ததாக கூறப்பட்டது. மாணவிகள் மது மயக்கத்தில் இருந்தபோது, விடுதி உரிமையாளர் ஜெகநாதன் வாட்ஸ் அப் கால் வழியாக தவறான கோலத்தில் தோன்றியதாகவும்.

இதற்கு வார்டன் புனிதா உதவியதாகவும் விடுதியில் உள்ள சில பெண்கள் மூலம் குற்றச்சாட்டு எழுந்து கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகார் வெளியான சில மணி நேரங்களில் விடுதிக் காப்பாளர் புனிதாவும் விடுதி உரிமையாளர் ஜெகநாதனும் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டனர். கோவை பீளேமேடு காவல்துறையினர் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடிவந்த நிலையில் வியாழனன்று அதிகாலை நெல்லை ஆலங்குளம் அருகே சிவலார்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: