புதுதில்லி, ஜூலை 26-

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிஓடியவர்களை மட்டுமல்ல, நாட்டிற்குள்ளேயே வலம் வருகிறவர்களும் சட்டத்தின் வரம்புக்குள்  கொண்டுவரப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் இளமாறம் கரீம் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன் அன்று நாட்டைவிட்டுத் தப்பி ஓடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டமுன்வடிவு மீது விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று இளமாறம் கரீம் பேசியதாவது:

“இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவருவதற்கான நோக்கத்தில், “பொருளாதாரக் குற்றவாளிகள் நம் நாட்டின் நீதிமன்றங்களின் அதிகாரவரம்பெல்லையிலிருந்து தப்புவதற்காக நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்,” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.  பொருளாதாரக் குற்றங்களில்  அதிகமானவை, வங்கிகளில் கடன் பெற்றுவிட்டுத் திருப்பிக் கட்டாதவைகள்தான். இதனால் நாட்டின் வங்கித்துறையின் நிதிநிலைமை மிகவும் மோசமடைந்துகொண்டிருக்கின்றன. எனவே, இந்தச்சட்டமுன்வடிவு, வங்கித்துறையை வலுப்படுத்துவதையும், அதன்மூலமாக பொருளாதாரத்துறையை வலுப்படுத்துவதையும்  குறியாகக் கொண்டிருக்கிறது.

நம் வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் (NPAs) அதிகமாகிக்கொண்டே இருப்பது ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கிறது. செயல்படா சொத்துக்கள் (வங்கிக் கடன்கள்) பெற்றவர்கள் நாட்டைவிட்டுப் பறந்தோடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றையதினம் செயல்படா சொத்துக்கள் 10 லட்சம் கோடி ரூபாயாகும். பொருளாதாரக் குற்றவாளிகள் கட்டாத தொகை என்று இந்தச் சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவாகும்.

வங்கிகளில் மிகப்பெரிய அளவில் கடன்கள் பெற்றுவிட்டு, கட்டாத, விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்கள், நம் வங்கிகளைக் கொள்ளையடித்துவிட்டு, மிகவும் சௌகரியமாகவே வெளிநாடுகளுக்குப் பறந்துசென்றிருக்கிறார்கள்.  வெளிநாடுகளுக்குச் சென்றபின் அவர்கள் நம் அரசாங்கத்திற்கே சவால் விடுகிறார்கள். நம் வங்கிகள்தான் குற்றம் செய்திருப்பதுபோல கூறிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு மோசமான விஷயம்?

எனவே இப்பிரச்சனை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அவர்களை மீளவும் இந்தியாவிற்குக் கொண்டுவரக்கூடிய விதத்தில் புதிய விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் வங்கிகளில் பெற்ற கடன்தொகை முழுமையாகக் கைப்பற்றப்பட வேண்டும்.

இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்களுக்கு நம் அரசாங்கம் பின்பற்றிவரும் நவீன தாராளமயக் கொள்கைதான் முக்கிய காரணமாகும். இப்போதும்கூட,  வங்கிகளில் கடன்கள் வாங்கியுள்ள பெரும் கார்ப்பரேட்டுகளிடம் செல்வதற்கு இந்த அரசு தயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெற்ற கடன்களில் 84 சதவீதம் வரைக்கும் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தச் சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதனால்மட்டும் குற்றங்களை எப்படித் தடுக்க முடியும்?

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 50ஆவது ஆண்டில் இந்தச் சட்டமுன்வடிவை நாம் கொண்டுவந்திருக்கிறோம். தேசியமயமாக்கப்பட்டபின், நம் வங்கிகள் வளர்ந்திருக்கின்றன. தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னர், நம் மொத்த டெபாசிட் தொகை சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய்தான். ஆனால், இன்றையதினம் அது 1 கோடியே 25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஆனாலும், இன்றையதினம் வங்கிகளின் கதவுகள் கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே திறக்கப்படுகின்றன. விவசாயிகள், சுயவேலை செய்வோர் மற்றும் சிறிய வர்த்தகர்கள் வங்கிகளுக்குள் நுழையமுடியாதவிதத்தில், தடுக்கப்படுகின்றனர்.  அதனால்தான் கார்ப்பரேட்டுகள் நம் வங்கிகளை மிக எளிதாகச் சூறையாடிவிட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிடுகின்றனர். அரசாங்கம் இவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இந்தச் சட்டமுன்வடிவு மட்டும்  போதுமானதல்ல. இதனை மேலும் வலுப்படுத்திட வேண்டும். இந்தச் சட்டமுன்வடிவானது கடன் பெற்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடியவர்களை மட்டுமல்ல, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டிற்குள்ளேயே நடமாடிக்  கொண்டிருப்பவர்களையும் இச்சட்டத்தின் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.”

இவ்வாறு இளமாறம் கரீம் பேசினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.