கோயம்புத்தூர்;                                                                                                                                                                       வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவை என அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்து குடிநீரை வணிகமயமாக்கும் கோவை மாநகராட்சியின் செயல் ஏற்க முடியாது. சூயஸ் நிறுவனத்துடனான கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ள குடிநீர் ஒப்பந்தத்தை எதிர்த்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மின்சாரம், பெட்ரோல், டீசல் போல குடிநீரையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் புதனன்று செய்தியாளர் சந்திப்பில் சொன்னது கண்டனத்திற்குரியது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 24 மணி நேரம் குடிநீர் வழங்குகிறோம் என்று மக்களை ஏமாற்றுவதற்காக இதைச் சொல்கிறார்கள். குடிநீர் விநியோக ஒப்பந்தம் எடுத்துள்ள பன்னாட்டு தனியார் நிறுவனத்தின் கொள்கையை நகராட்சி நிர்வாக ஆனையரின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றது.

சூயஸ் நிறுவனம் கோவைக்கு வந்திருப்பது பெருமைக்குரியது என்று கூறுவது கேலிக்குரியதாகும். வறட்சி மாவட்டமாக உள்ள சிவகங்கை மாவட்டமோ, கோவில்பட்டி போன்ற நகரங்களுக்கோ சென்று குடிநீரை விநியோகிக்குமா அந்த நிறுவனம்? 11க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அணைகள், நீர்நிலைகள், நீராதாரங்கள் உள்ள கோவை மாவட்டத்தை தேர்ந்தெடுத்திருப்பது ஏன்? குடிநீருக்கான கட்டணத்தை அரசு நிர்ணயிக்கும் என சொல்வதன் பொருள், சூயஸ் நிறுவனம் தீர்மானிக்கும்; அதை மாநகராட்சி செயல்படுத்தும் என்பது தான். படிப்படியாக பொதுக் குழாய்கள் அகற்றப்படும்; குடம், தொட்டி போன்றவைகளில் தண்ணீரை தேக்கி வைக்கக் கூடாது என அதிகாரிகள் கூறுவது சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான்.

இதேபோல வீட்டின் பரப்பளவு, பயன்பாடுக்கு ஏற்ப குடிநீர் கட்டணத்தை நிர்ணயிப்பது என்பது தமிழகத்தில் எந்த மாநகராட்சி, நகராட்சிகளிலும் இல்லாத ஒன்று, இதுவும் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கிற ஒன்றுதான்.

குடிநீரை வியாபார பொருளாக மாற்றுவதுதான் கோவை மாநகராட்சிக்கும் சூயஸ் நிறுவனத்துக்குமான ஒப்பந்தம். அதனால் தான் இத்திட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை அரசு வெளியிடவில்லை. ஆகவே கோவை மாநகர மக்கள் எதிர்நோக்க உள்ள மிகப்பெரும் குடிநீர் அபாயத்தைக் கண்டித்து வரும் 31 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பாக வலுவான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான பங்களிப்பைச் செலுத்தும். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.