சென்னை,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ் என்எல் ஊழியர்கள் நடத்திய 72 மணி நேர உண்ணாநிலைப் போராட்டம் வியாழனன்று (ஜூலை 26) நிறைவடைந்தது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும், இந்திய அரசு உத்தரவுப்படி அவர் வாங்கும் அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதியத்திற் கான பங்கீட்டுத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கும் உடனடியாக 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தொலை தொடர்பு ஊழியர் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் நாடு முழுவதும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.

தொலை தொடர்பு ஊழியர் தேசிய கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் நடராஜன், தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர்கள் வளனரசு (எஸ்.என்.இ.ஏ), துரையரசன் (ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ), ரவிச்சந்திரன் (டி.இ.பி.யு), பட்டாபிராமன் (ஓய்வு பெற்றோர்) உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: