கோவை,
பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று 3 ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய குழுவை அமைத்து உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகம் கோரியபடி பிஎஸ்என்எல் 4ஜி ஸ்பெக்ட்ரமை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாய்கிழமை முதல் மூன்றுநாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி வியாழனன்று 3 ஆவது நாளாக இப்போராட்டம் தொடர்ந்தது.

பிஎஸ்என்எல் கோவை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஊழியர் சங்கத்தின் ஏ.முகமது ஜாபர், என்எப்டிஇ பாலசுப்பிரமணியம், எஸ்என்இஏ கே.சகான், ஏஐபிஎஸ்என்எல்இஏ வனராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். அப்போது, கடந்த ஆண்டு சென்னையில் பெரும் புயலால் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது மற்ற தொலைபேசி நிறுவனங்கள் அனைத்தும் செயல் இழந்துவிட்டது. ஆனால் பிஎஸ்என்எல் மட்டுமே சேவையை சிறப்பாக வழங்கியது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இன்னும் தொழில்நுட்ப கருவிகள் அளித்தால் இந்தியாவிலேயே சிறந்த நிறுவனமாக மாறும். ஆனால் மத்திய அரசு பிஎஸ்என்எல் ஊழியர்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ஈரோடு
ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சி.மணி, என்எப்டிஇ பாலசுப்பிரமணியன், எஸ்என்இஎ சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன், என்எப்டிஇ மாவட்ட செயலாளர் பழனிவேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில அமைப்புச் செயலாளர் வி,மணியன், என்எப்டிஇ மாநில அமைப்புச் செயலாளர் புண்ணியகோடி, சிஐடியு சங்க நிர்வாகி ப.மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள்பட திரளானோர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: