சென்னை,
உள்ளிருப்புப் பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கும், அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம், பட்டயம், உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்புப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.20 ஆயிரமாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35 ஆயிரம் ஆகவும் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.37 ஆயிரத்து 500ஆகவும், 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டய படிப்பை படிக்கும் மருத்துவ மாணவர்களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரமாகவும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உயர் சிறப்பு மருத்துவப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு முதல் ஆண்டில் இருந்து 6ஆம் ஆண்டு வரையில் மாதம்தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதனை முதல் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.43 ஆயிரத்து 500 ஆகவும், 3, 4, 5 மற்றும் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.45 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

மேலும், ஊக்கத் தொகையுடன், உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 600 ரூபாயை உயர்த்தி வழங்கவும், அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம் – பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.1000 உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: