பாட்னா:
நாடாளுமன்றக் கூட்டமென்றாலே வெளிநாட்டுக்கு கிளம்பிவிடும் பிரதமர் மோடி, அங்கிருந்தாவாறே, கும்பல் படுகொலை, ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் பற்றி பதிலளித்தால்கூட சரிதான் என்று பாஜக தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
அன்புள்ள மோடி சார், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. வழக்கம்போல் அதில் பங்கேற்காமல் 3 நாடுகளுக்கு ஆப்பிரிக்கப் பயணம் சென்றுவிட்டீர்கள். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தபின் நீங்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டால், வேறு ஏதேனும் மிகப்பெரிய பிரச்சனை வந்துவிடாதே…உலகில் இன்னும் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய நாடுகள் சில இருக்கின்றன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்குச் சென்ற முதல் பிரதமர் நீங்கள்தான். வாழ்த்துக்கள்.
உங்களின் கட்டிப்பிடி வைத்தியம் இந்தியாவில் மிகப்பெரிய செய்தியாக உலாவிக்கொண்டிருக்கிறது. ருவாண்டா மரபுகள்படி, அங்குள்ள தலைவருக்கு கைகுலுக்கித்தான் வாழ்த்துத் தெரிவிக்க முடியுமாம்.

ருவாண்டா நாட்டின் ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு பசு’ திட்டமான ‘கிரிங்கா’ திட்டம், சமூகப் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 200 பசுமாடுகளை நீங்கள் அன்பளிப்பாக ஒரு கிராம மக்களுக்கு அளித்தது, மிகப்பெரிய சாதனை. புத்தாக்கமான சிந்தனை. உங்களின் இந்தச் செயலால், இந்தியா, ருவாண்டா ஆகிய மிகப்பெரிய நாடுகளின் நட்புறவு, மேலும் நெருங்கி, வலிமையடைய உதவும்.

ஆனால், மோடி சார், இந்தியாவுக்கும் வாருங்கள். பசு பாதுகாவலர்களால் அப்பாவிமக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய செய்தியாக்கி இருக்கிறார்கள். ஆனால் மோடி சார் நீங்கள் இதுவரை ஒரு வார்த்தை கூட இதைப்பற்றிப் பேசவில்லை. இது குறித்து வெளிநாட்டில் இருந்து கூட கருத்துச் சொல்லலாம்.ஒரு பணிவான வேண்டுகோள், ரபேல் போர்விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக அரசுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானமும் தாக்கலாகி இருக்கிறது. ஜெய் ஹிந்த்!
இவ்வாறு சத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.