பெய்ஜிங்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் அதீதமான நடவடிக்கைகள் காரணமாக சீனாவும் ஈரானும் தங்களுக்கிடையிலான எண்ணெய் வர்த்தகத்தை பல மடங்கு அதிகப்படுத்தியுள்ளன. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆத்திரத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் நிர்வாகம், எந்த மீட்சியும் பெறாத அமெரிக்க முதலாளித்துவ பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக உலக அரங்கில் பல்வேறு விதமான எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கியமானது, சீனாவுக்கெதிரான வர்த்தக யுத்தம் ஆகும். சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்தியதில் துவங்கி சீனப் பொருட்களுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிப்பது உட்பட விதவிதமான தடைகளை டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரிகளை உயர்த்தியுள்ளது. கடந்த பல மாதங்களாக அமெரிக்க – சீனா இடையிலான வர்த்தகப் போர் வலுத்து வருகிறது.

இதனிடையே, அமெரிக்க நிர்வாகம், ஈரானுடனான அணுசக்தி உடன்பாட்டிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகியது. அத்துடன் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடைகளையும் விதித்தது. இதன் விளைவாக, எண்ணெய் வர்த்தகத்தை நம்பியுள்ள ஈரானின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்ய முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் கணக்குப் போட்டது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருப்பது, டிரம்ப் கணக்கிற்கு நேர்மாறானது ஆகும்.
அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டுள்ள சீனாவும், ஈரானும் தங்களுக்கிடையிலான வர்த்தக ஒத்துழைப்பை இன்னும் பலமடங்கு வலுப்படுத்தியுள்ளன. ஈரானிய எண்ணெயை யாரும் வாங்கக்கூடாது என்ற அமெரிக்காவின் தடையை சீனா நிராகரித்துவிட்டது. சீனா மட்டுமின்றி அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடுகளும் கூட அந்த தடையை நிராகரித்துவிட்டு ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை வலுப்படுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகில் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான சீனா, கடந்த ஜனவரி முதல் மே வரையிலான காலத்தில் மட்டும் ஈரானிடமிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 7லட்சத்து 18 ஆயிரம் பேரல்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த அளவும் கடந்த ஓரிரு மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. எதிர்வரும் நவம்பரிலிருந்து, ஈரானுடன் யாரும் எண்ணெய் பேரம் வைத்துக்கொள்ள கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் உலக நாடுகளிடம் நாட்டாமை செய்த போதிலும், நவம்பர் வாக்கில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அமெரிக்கா தவிர பல்வேறு நாடுகளுக்கு பல மடங்கு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் சில எண்ணெய் நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் தடை உத்தரவுக்கு அஞ்சி ஈரானுடனான பேரத்தை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளன; ஆனாலும் சீனா அந்த இடத்தை நிரப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தனது தடை விதிப்பு செல்லுபடியாகாது என்பதை டிரம்ப் உணரத் துவங்கியுள்ளது தெரிகிறது. அவர் இப்போது ஈரானை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அச்சுறுத்தலுடனும் பொருளாதாரத் தடை உள்ளிட்ட அராஜக அறிவிப்புகளுடனும் அமெரிக்கா அழைக்கும் தன்னிச்சையான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈரான் நிராகரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: