தீக்கதிர்

சிம்கார்டு இல்லாத மொபைல் போன் : பிஎஸ்என்எல் அறிமுகம்..!

நாகர்கோவில்;
நாட்டில் முதன் முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் போன், கணினி மூலமாக பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இந்த அதிநவீன என்.ஜி.என் (அடுத்த தலைமுறை நெட்வொர்க்) இணைய தொலைபேசி வசதியை வாடிக்கையாளர்கள் அனைவரும் பெறலாம்.
இணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்டஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கணினிகள், லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் செயலியை நிறுவி விட்டால் வரம்பற்ற அழைப்புகளை (ஆடியோ, வீடியோ) மேற்கொள்ள முடியும். இந்த செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி நிறுவனத்தின் எண்களையும் (லேன்ட்லைன் உள்பட) அழைக்க முடியும். வைஃபை வசதி உடையவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவைக்கு சிம்கார்டு அவசியம் இல்லை.

எந்தவொரு நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் 1,099 ரூபாயை ஒரு முறை கட்டணமாக செலுத்தி, இந்த சேவையை பெறலாம். வெளிநாடுகளுக்கு பேசும் வசதியை பெற 2 ஆயிரம் ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். அறிமுக சலுகையாக ஒரு ஆண்டு கட்டணத்துடன் நாட்டின் அனைத்து நெட்வொர்க்கிலும் ஆண்டு முழுவதும் பேசும் வசதியை விங்ஸ் ஆப் அளிக்கிறது.

இந்த செயலியைப் பெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக ஒரு முறை கட்டணத்தை செலுத்தி பெற முடியும். புதிய இணைப்புகளை பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.