கோவை,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

உறுதிமொழிக் குழு தலைவர் ஐ.எஸ்.இன்பதுரை, உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜுனன், க.கார்த்திகேயன், ஏ.பி.நந்தகுமார், அ.மனோகரன், ஜே.கே.என்.ராமஜெயலிங்கம், அ.ராமு, பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன், இணைச்செயலர் பா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் குழுத் தலைவர் ஐ.எஸ்.இன்பதுரை பேசியதாவது: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் உறுதியளித்த திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக, மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறோம்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் உறுதியளிக்கப்பட்ட 152 கேள்விகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் 65 உறுதிமொழிகள் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், உரிய பதில்கள் காரணமாக 27 உறுதி மொழிகள் ஏற்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 உறுதிமொழிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டாமல், அலுவலர்கள் விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, மத்திய சிறைச்சாலை, உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள், மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், சார் ஆட்சியர்கள் காயத்ரி கிருஷ்ணன், கார்மேகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: