திண்டுக்கல்;
தமிழக ஆளுநர் தூய்மை இந்திய திட்டப் பணிகளில் பங்கேற்க திண்டுக்கல் நகர் வந்ததையொட்டி சாலைகளில் தடுப்பு அமைத்து ஒரு மணி நேரம் சாலை மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாளாக தமிழக ஆளுநர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

வியாழனன்று திண்டுக்கல் நகரத்தில் தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆர்.எம்.காலனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் அருகிலும், காட்டாஸ்பத்திரி அருகிலும் காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்தனர். இதனால் திருச்சி, கரூர் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். மேலும் பேருந்துகளும் கடும் நெரிசல்களுக்கிடையில் பயணித்தன. முன்னதாக இந்த சாலையில் ஒத்திகை என்ற பெயரில் 2 தினங்களுக்கு முன்பு இதே போல் பல மணி நேரம் மூடி பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். ஆர்.எம்.காலனி சாலையில் எந்த வாகனத்தையும் அனுமதிக்கவில்லை.

2 நிமிட நிகழ்ச்சிக்கு இம்புட்டு பந்தாவா?
ஆர்.எம்.காலனியில் அதிகாலையிலிருந்து மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களை அதிகாரிகள் கசக்கி பிழிந்து வேலை வாங்கினர். கல்லூரி மாணவர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்களும் ஆளுநர் வரும் வரை பல மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆர்.எம்.காலனியில் தூய்மை இந்தியா குறித்தான உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் வாசித்தனர். பின்னர் ‘குப்பைகளை’ அகற்றும் பணியில் ஈடுபட்டார். மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள குப்பைகளை ஏற்கனவே அகற்றி இருந்தனர்.இந்நிலையில் ஆளுநர் குப்பை கூட்டுவதற்காக சில போஸ்டர்களை கிழித்து போட்டிருந்த இடத்தில் 2 நிமிடம் கூட குப்பை அகற்றும் பணி ஈடுபடவில்லை. திடீரென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஆர்.எம்.காலனிக்குள் நுழைய முயன்றார். பிறகு திரும்பிவிட்டார். பின்னர் பூங்காவை பார்வையிட புறப்பட்டார். ஆளுநர் சென்ற பிறகு ‘அப்பாடா போய்விட்டார்’ என்று மாநகராட்சி ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த 2 நிமிடம் குப்பை கூட்டவா இம்புட்டு பந்தா என்று ஆர்.எம்.காலனி மக்கள் புலம்பித் தள்ளினர். 

இல்லாத கத்திரிக்காயை காட்சிப்படுத்திய அதிகாரிகள்
இந்நிகழ்ச்சியின் போது அரசு சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் கொட்டபட்டி கத்திரிக்காய் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கொட்டபட்டி கத்திரிக்காய் மிகவும் ருசியானது. பாரம்பரியமிக்க இந்த கத்திரிக்காய் அழிந்து போன ஒன்றாக திண்டுக்கல் நகர மக்களால் பேசப்படுகிறது. இந்நிலையில் இது தான் கொட்டபட்டி கத்திரிக்காய் என்று வேறு ஒரு கத்திரிக்காயை கண்காட்சியில் அதிகாரிகள் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மின்மயானம் எதிரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை ஆளுநர் பார்வையிட்டார். மரக்கன்று நடவு செய்தார். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.