தீக்கதிர்

ஆக.6 ல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சிஐடியு மாநிலக்குழு ஆதரவு

தருமபுரி,
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை ஊழியர்கள் அடுத்த மாதம் 6 ஆம் தேதி நடத்தும் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

சிஐடியு தமிழ் மாநிலக் குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி. குமார், ஆர். கருமலையான், கே.திருச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கண்டித்து அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் சார்பில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப்போராட்டத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக்குவது, பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவர்களுக்கு பி.எப் பிடித்தம், அடையாள அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.