நாகர்கோவில்,
நாகர்கோவிலில் புதனன்று ‘‘அய்யா வைகுண்டரின் மரபை பாதுகாப்போம்’’ என்கிற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் அருணன் பேசியதாவது:

முரணாக பேசும்  பாஜக, ஆர்எஸ்எஸ்:
கோயில்களிலிருந்து அரசு விலகி இருக்க வேண்டும் என்று வாதிடும் பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்கள் அய்யா வைகுண்டர் பதியை மட்டும் அறநிலையத்துறை எடுக்க வேண்டும் என்று வாதிடுவது ஏன்? இது முரணாக இல்லையா? அப்படி என்றால் அவர்களுடைய இலக்கு என்ன. கோயில் களை பாதுகாப்பது அல்ல அவர்களது இலக்கு. கோயில்கள் மூலமாக தங்களது மோசமான வர்ணாசிரம-மநுவாத சிந்தனையை அமல்படுத்துவது தான் அவர்களது இலக்கு. ஏன் அய்யா அவர்களின் பதியை அறநிலையத் துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் அங்கு விக்கிரகங்கள் இல்லை. மற்ற கோயில்களில் இருந்த 7ஆயிரம் சிலைகள் இப்போது இல்லை. இருப்பதெல்லாம் டூப்ளிக் கேட். இதை கூறியவர் இதற்கென நியமிக்கப்பட்ட காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல்.

முற்போக்கு மரபை  சீரழிக்கும் முயற்சி:
அய்யா வைகுண்டரின் பதியில் விக்கிரகங்களை வைத்து வழிபடவும், அதன்மூலம் அய்யா வைகுண்டர் முன்வைத்த முற்போக்கு மரபுகளை அறநிலையத்துறை மூலம் சீரழிக்கும் முயற்சி இது. அய்யா முன்வைத்த சமதர்ம கோட்பாட்டை வைதீக மதத்
திற்குள் திணிப்பதற்கான ஏற்பாடு இது. இந்து மதம் என்பதே ஆங்கிலேயர்கள் அளித்த வடிவம் என் பதை சங்கராச்சாரியாரே குறிப்பிட்டுள்ளார். இந்து மதம் என்பதே மாறுபட்ட பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட பிராமணிய மதம் அல்லாதவற்றை தனக்குள் கிரகித்துக் கொண்டுள்ளது. அதற்குள் ஒரு பிரிவான வைதீக மதம் மற்ற  பிரிவுகளை அடக்கி ஆள பல முயற்சிகளை செய்கிறது. அதன் ஒரு பகுதியாக கிராம பூசாரிகளுக்கு சமஸ்கிருத பயிற்சி அளிக்கிறார்கள்.

இறையியல் கலகமல்ல சமூக கலகம்:
வள்ளலாருக்கு முன்பே சமயம் சார்ந்து சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்தவர் அய்யா வைகுண்டர். அவர் புதிய இறையியல் கோட்பாட்டை வகுத்தளித்தார். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் சமூக நீதியை முன்வைத்தார். அய்யா கோவில்களை அல்ல பதியை அமைத்து கண்ணாடி முன்னால் நின்று வழிபட வைத்தார். தன்னைத்தானே தரிசித்துக் கொள்வது. தனக்குள் ஒரு கடவுள் இருப்பதாக உணர வைத்தார்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நிழல்தாங்கல்களை அமைத்தார். தீண்டாமைக்கு எதிராக தனது சீடர்களை பிச்சம்மாள் என்கிற சலவைக்காரியின் வீட்டில் உண்ணுமாறு பணித்தார். அவர்கள் அந்த பெண்மணியின் வீட்டுக்கு சென்று சாப்பிடாமலே திரும்பினர். மறுபடியும் அவர்களை அனுப்பி நீங்கள் அங்கு சாப்பிட்டால்தான் எனது சீடர்களாக நீடிக்க முடியும் என்றார். இன்றைக்கு பாப்பம்மாள் சமைத் தால் சாப்பிடக்கூடாது என குழந்தைகளைத் தடுக்கிறார்கள். 1830களில் அப்படி ஒரு சிந்தனையை ஏற்படுத்தியது மகத்தானது. 1940களில் பெரியார் நேரடியாக மதத்தை சவாலுக்கு இழுத்ததுபோல் செய்ய முடியாத காலகட்டத் தில் அய்யா வைகுண்டர் செய்தது இறையியல் கலகம் மட்டுமல்ல சமூக கலகமும் ஆகும். ஆட்சியாளர்களுக்கு எதிரான அந்த கலகம். உள்ளூர் மன்னனுக்கு எதிராகவும், அவனுக்கு பின்னணியில் இருந்துவந்த நம்பூதிரிகளுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் காலூன்றிய வெள்ளையருக்கு எதிராகவும் அமைந்தது.

குடியரசுத் தலைவரையே அனுமதிக்காத கொடுமை
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட மனித உரிமைகள் குறித்தும் ஆன்மீக உரிமை குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத்தலைவரே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத கொடுமை நடக்கிறது. அவராகவே கோவிலுக்குள் செல்வதை தவிர்த்து குடும்பத்துடன் வெளியே ஜமுக்காளம் விரித்து அமர்ந்த காட்சி நாட்டு மக்களுக்கு வேதனை அளித்தது. எனவே, அய்யா வைகுண்டரின் முற்போக்கு மரபை பாதுகாக்கும் இயக்கமாக இது தொடர வேண்டும் என்றார்.

எந்த நியாயமுமில்லை:
எழுத்தாளர் பொன்னீலன் பேசும்போது, ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் நடுவிலுள்ளது மார்க்சிய சிந்தனை. சாணார் முதல் சக்கிலி வரை ஒன்றுபடுத்தியவர் அய்யா வைகுண்டர். அதற்காகவே, அவரை திருவனந்தபுரம் திறந்தவெளி சிறையில் துளையிடப்பட்ட தடியில் கால்களை நுழைத்து சங்கிலியால் பூட்டி வைத்தான் ராஜா. தினம்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அய்யாவுக்கு ஆதரவாக அங்கு சென்றார்கள். தன்சாதி மக்களைத் தவிர மற்றவர்களை திரட்டக்கூடாது என வரைந்த ஓலையை கிழித்து எறிந்தபோது, அவர் மகானாக மக்களிடம் உயர்ந்தார். மேலோர் கோயில்களுக்கு மாற்றாக மக்களுக்கான பதிகளை அமைத்தார். பூஜை என்றில்லாமல் பணிவிடைகளே அங்கு நடத்தப் பட்டு வருகின்றன. இந்த பதிகளை அறநிலையத்துறை எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை என பொன்னீலன் பேசினார்.

அறநிலையத்துறை கைப்பற்றியது முறையல்ல:
பாலபிரஜாபதி அடிகளார் பேசும்போது, நான் ஒரு இந்துவாக சாகமாட்டேன். என்னை கொன்றாலும் அதுகுறித்து கவலையில்லை. பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் பதியை நடத்த வேண்டும் என்பது தான் அய்யா வகுத்த வழிமுறை. அதை பின்பற்றி நாங்கள் பதியை நடத்தி வருகிறோம். சிலர் கூறுவதுபோல் பணத்தை நோக்கமாகக் கொண்டு நாங்கள் செயல்படவில்லை. அய்யா வைகுண்டரின் தலைமைப்பதியை அறநிலையத் துறையினர் கைப்பற்றியது முறையல்ல. அதை முறியடிக்க துவங்கப் பட்டிருக்கும் இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட முடியும் என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள அன்பர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்று பாலபிரஜாபதி அடிகளார் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.