ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டாரம் கோமாளம் ஊராட்சி பூதாளபுரத்தில் 1970 ஆம் ஆண்டு அப்பகுதிமக்களின் கோரிக்கைக்கிணங்ககன்னட வழிப்பள்ளியாக தொடங்கப்பட்டது. இந்த பூதாளபுரம் தொடக்கப்பள்ளி பூதாளபுரம், ஒரத்தி, உருளிகுட்டை, வி.எம்.தொட்டி மற்றும் கெரெதொட்டி ஆகிய ஐந்து குடியிருப்புகளிலிருந்தும் 19 குழந்தைகள் வருகின்றனர். இதில் பூதாளபுரம் தவிர நான்கு குடியிருப்புகளும் பழங்குடி மக்கள் வசிக்கின்ற குடியிருப்புகளாகும்.

மேற்காணும் 19 குழந்தைகளில் ஏழு குழந்தைகள் மட்டும் கன்னடம் பயிலும் குழந்தைகளாவர்கள். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு செல்ல வேண்டுமாயின் 70 கி.மீ தொலைவில் உள்ள தாளவாடிக்குத்தான் செல்லவேண்டும். ஆகவே, இதற்கு பதிலாக ஐந்து கி.மீ தொலைவில் கர்நாடகாவில் உள்ள உடையார் பாளையத்தில் சோத்துவிடுகின்றனர். அதுவும், இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடம் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு இங்கு அனுப்புவதை விரும்பாமல், தொடக்கப்பள்ளி முதலே இங்கு சேர்த்து படித்துவைக்க பூதாளபுர குழந்தைகளின் பெற்றோர் விரும்பு கின்றனர். ஆனால், மீதமுள்ள 12 குழந்தைகளும் பழங்குடியின குழந்தைகள். இக்குழந்தைகள் தமிழ்வழியில் பயில ஏங்குகின்றனர். இவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இது கன்னட வழிப்பள்ளி என்பதால் இந்த 19 குழந்தைகளுக்கும் கன்னட வழியில் போதிக்க ஒரு தலைமையாசிரியரும், உடன் ஒரு இடைநிலை ஆசிரியரும் என, இரண்டு கன்னட ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இவர்களுக்குளுக்கு தமிழ்வழியில் போதிக்கத் தெரியாததால், இக்குழந்தைகள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

இந்த நான்கு பழங்குடி கிராம பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை இங்கு தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் இப்பிரச்சனை தெரியும். ஆனால், தீர்வுதான் எட்டப்படவில்லை என குற்றம் சட்டுகின்றனர். இந்நிலையில் இந்த நான்கு கிராம பழங்குடி குழந்தைகளின் பெற்றோர்களின் தொடர் வற்புறுத்தலால் இப்பள்ளியின், தலைமையாசிரியரின் ஏற்பாட்டின் பேரில் தற்காலிகமாக உள்ளூரில் எட்டாம் வகுப்பு பயின்ற ஒரு பெண்இவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இப்பள்ளிக்கு அடுத்து தமிழ்வழியில் இவர்கள் பயில வேண்டுமாயின் சுமார் 5 கி.மீ. தொலைவில் கேர்மாளம் உயர்நிலைப்பள்ளி தான் அமைந்துள்ளது. ஆகவே, பூதாளபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் உடனடியாக தமிழ்வழிப்பள்ளி தொடங்கப்படவேண்டும். இந்த பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி என்பது ஒரு எட்டாக்கனியாகவே உள்ளது. ஆகவே, இவர்களுக்கு வாழிடத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை எனும் கதையாக, வாழ்விடத்தில் பள்ளியிருந்தும் பயனில்லாமல் தவிக்கின்றனர். யாமறிந்த மொழிகளியே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்குங் காணோம் என்று தமிழ்மொழியின் பெருமை பேசும், செம்மொழி அந்தஸ்தை பெற்ற இந்த தமிழ்மொழி ஏன் பழங்குடி குழந்தைகளுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. இந்த பழங்குடி குழந்தைகளின் தமிழ்க்கனவு எப்போதுநிறைவேறும்என கேள்வி எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளிக் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்து அப்பள்ளியில் தமிழ் வழிக்கு கல்வியை கொண்டுவர வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கையாக உள்ளது.

-லெனின்

Leave A Reply

%d bloggers like this: