கோவை,
கோவை உக்கடம் அருகேயுள்ள வாலாங்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை சுங்கம்-உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில், சுங்கம் ரவுண்டானா அருகே செவ்வாயன்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்துகிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், இறந்து கிடந்த மீன்களைப் பார்வையிட்டனர். கோவையில் சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் வாலாங்குளம் நிரம்பியுள்ளது. குளத்தில் உள்ள நீருடன் கழிவுநீர் கலந்ததால், மீன்கள் இறந்ததா என்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர். கோவையில் உள்ள பல்வேறு சாயப்பட்டறைகளின் கழிவுநீர் மற்றும் வெவ்வேறு கழிவுநீரை உறிஞ்சும் லாரிகள், உக்கடம் பைபாஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும். மக்கள் யாரும் இல்லாத நேரத்தில்,அந்தக் கழிவுகளை குளத்தில் கொட்டியதால், அதில் இருந்த ரசாயனப் பொருட்கள் காரணமாக மீன்கள் இறந்து மிதந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இறந்து மிதந்த மீன்கள் மற்றும் குளத்தின் நீரைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவில்தான், மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றனர்.

Leave A Reply

%d bloggers like this: