திண்டுக்கல்;
மக்கள் பிரதிநிதி அல்லாத ஒருவருக்காக ராணுவ விமானத்தை அனுப்பிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்லில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் சந்திக்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து புதனன்று முதல்வருக்கு நெருக்கமான 2 அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சருடன் சந்திப்பு நடத்தியிருப்பது தமிழகத்தில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இதைவிட ஓ.பன்னீர்செல்வம் தில்லிக்கு எதற்காக சென்றார் என்ற தகவலை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கோவை ராணுவத்தளத்தில் இருந்து ராணுவ விமானம் மதுரைக்கு வந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ, மத்திய அரசோ உரிய விளக்கம் அளிக்கவில்லை. இது விதிமீறலாகும். ஆகவே உடனடியாக நிர்மலா சீத்தாராமன் பதவி விலக வேண்டும். மேலும் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சராகவோ. எம்.பி.யாகவோ, எம்எல்ஏவாகவோ இல்லாத ஒரு சாதாரண ஒருவருக்கு ராணுவ விமானத்தை எப்படி பயன்படுத்தலாம். மற்ற குடிமகளுக்கு ராணுவ விமானத்தை தருவார்களா?

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தில்லி சென்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க அனுமதி கேட்டுத்தான் சென்றாரா? அல்லது அனுமதி பெறாமல் சென்றாரா? அவ்வாறு சென்றும் அவரை சந்திக்காமல் திரும்பியிருப்பது தமிழகத்திற்கு பெரிய இழுக்காகும். துணை முதல்வரை, மத்திய அமைச்சர் சந்திக்க மறுத்ததற்கு காரணம் என்ன? ஆகவே தமிழக துணை முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது. உடனடியாக பதவி விலக வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்த சேர்த்திருப்பதாக திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருந்தார். கடந்த 3 மாதங்களாக அந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரிக்கப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு போட்டார். அதனையொட்டி நீதிமன்றம் ஏன் வழக்கை விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. நாங்கள் விசாரிக்கிறோம் என்று லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. தற்போது வழக்கு விசாரணை நடக்க உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மனுவை ஏற்றுக்கொண்ட பிறகு அதில் தொடர்புடைய ஓ.பன்னீர்செல்வம் அமைச்சராக நீடிப்பது முறையற்றது. அவர் துணை முதல்வராக நீடிக்கும் வரை அவருக்கு கீழே உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை எப்படி விசாரிக்கும்?எனவே விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். நாளை நாங்கள் விசாரித்துவிட்டோம் என்று ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் மேற்கொள்ளலாம். எனவே முறையான நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (நநி)

Leave a Reply

You must be logged in to post a comment.