புதுதில்லி, ஜூலை  25-

தூத்துக்குடியில் இயல்புவாழ்க்கை இன்னமும் திரும்பவில்லை என்று மாநிலங்களவைவில் திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க் கிழமையன்று காலை அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும்நேரத்தில் கனிமொழி பேசியதாவது:

“2018 மே 22 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 13 பேர் காவல்துறையினரால் சுடப்பட்டு, இறந்துள்ளார்கள். இன்றுவரை அங்கே இயல்புவாழ்க்கை திரும்பவில்லை. காவல்துறையினர் மக்களை துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு சோதனைகள் தொடர்கின்றன. பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். குழந்தைகள் துன்புறுத்தப்படுகிறார்கள். நான் ஒருசில தினங்களுக்குமுன் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் அங்கே சென்றார்கள். காவல்துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் கூட்டம் நடத்த தேர்ந்தெடுத்த இடங்களுக்கெல்லாம் சென்று  அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். கூட்டம் நடத்த இடம் அளித்த உரிமையாளர்களைச் சந்தித்து, கூட்டத்திற்கு இடம் தரக்கூடாது என்று காவல்துறையினர் மிரட்டியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்தேன். இவ்வாறு கூட்டம் நடத்தும் இடம் மூன்று முறை மாற்றப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான இரா.நல்லக்கண்ணு காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப் பட்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த உச்சநீதிமன்ற நீதிபதியின் பாதுகாப்பு ஊர்தி வீடியோ மூலம் படமெடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தின் அறிக்கையை அளித்திட காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.”

இவ்வாறு கனிமொழி பேசினார். கனிமொழியின் கருத்துடன் தாங்களும் உடன்படுவதாக டி.கே.ரெங்கராஜன் (சிபிஎம்), து.ராஜா (சிபிஐ), திருச்சி சிவா, ஆர்.எஸ். பாரதி (திமுக) ஆகியோர் தெரிவித்தனர்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.