கோவை,
கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 1,576 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசநோயை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக காசநோய் கண்டறியும் பிரச்சார வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தொடங்கி வைத்தார்.இந்த வாகனம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு முறையான பரிசோதனை மூலம் கண்டறிய உள்ளது. இதுகுறித்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் வீரக்குமார் கூறியதாவது:- கடந்த 2015 ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 85 பேருக்கு காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் காசநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 87சதவிகிதம் வரை குணமடைந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை கோவை மாவட்டத்தில் 1,576 காசநோயாளிகள் நடப்பாண்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாகனம் தமிழக முதல்வரால், கடந்த மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரி எடுக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளும் போது ரூ.2 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இரண்டு பரிசோதனை மாதிரிகள் ஒன்று கோவையிலும், மற்றொன்று சென்னையில் உள்ள இண்டர் மீடியேட் ஆய்வகம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஊக்கத் தொகையுடன் சிகிச்சை அளிக்கப்படும், இவ்வாறு கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: