நாமக்கல்,
வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி பள்ளிபாளையத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியின் பிரதான தொழிலான விசைத்தறியை நம்பி ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்துடன் காலாவதியானது. இதையடுத்து தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும் என சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படாத நிலையில் எதிர்வரும் ஜூலை 30 ஆம் தேதி முதல்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அசோகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உட்பட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

சத்யாநகரில் துவங்கிய இந்த பிரச்சார நடைபயணம் ஆயகாட்டூர், பிரேம் நகர், ராஜாஜிநகர், வசந்தநகர், அம்மன்நகர், பள்ளிபாளையம் நகரம், டிவிஎஸ் மேடு, கண்டிபுதூர், அக்ரஹாரம், அத்திப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். முடிவில், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி பிரச்சாரத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.

பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

இந்நிலையில் புதனன்று விசைத்தறி உரிமையாளர்கள், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு 75 கூலி உயர்வு, ஆலைகளில் நல்லகுடிநீர், கழிப்பிடம், முதலுதவி பெட்டி, தேசிய பண்டிகைகளுக்கு சம்பளத்துடன் விடுமுறை, அடையாள அட்டை, இஎஸ்ஐ, பி.எப், பஞ்சப்படி போன்ற சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால், ஜிஎஸ்டி வரியால் பாதிப்பு, பீஸ் தேக்கம், நூல் விலை உயர்வு போன்ற பாதிப்புகளால் கூலி உயர்வு குறித்து 6 மாத காலம் கழித்து பேசலாம் என உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் சுமூக உடன்பாடு ஏற்படாததால் வருகிற வெள்ளிக்கிழமை மதியம் (ஜூலை 28) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் உரிமையாளர்கள் தரப்பில் பி.எஸ்.கந்தசாமி, பி.சண்முகம், கணேஷ் உள்ளிட்டோரும், சிஐடியு சார்பில் விசைத்தறி சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், மாவட்ட பொருளாளர்கே.மோகன், ஒன்றிய செயலாளர்எஸ்.முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.