சென்னை,
கால்நடை மருத்துவம், கால்நடை பராமரிப்பு இளநிலை பட்டப்படிப்பிற்கான கலந் தாய்வை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ, அறிவியல் பல்கலைக்கழகத்தின் சென்னை, நாமக்கல், ஒரத்த நாடு, நெல்லை ஆகிய இடங்களில் இயங்கி வரும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 306 இடங்களுக்கு 12 ஆயிரத்து 107 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அவற்றில் 10 ஆயிரத்து 289 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில், முதல்கட்டமாக 824 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.  இதனைத்தொடர்ந்து, செவ்வாய்க் கிழமை (ஜூலை 24) சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பின்னர், 269 இடங்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூலை 25) சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் துவங்கியது. இக்கலந்தாய்வு ஜூலை 26 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

அதிக கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த பி.ஸ்ரீகார்த்திகா, வி.நந்தினி, ஜி.பிரவீன்குமார் உள்ளிட்ட 16 மாணவர்களுக்கு துறையின் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சேர்க்கைக் கான கடிதத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- பால் உற்பத்தியில் தமிழகம் 10ஆவது இடத்திற்கும், முட்டை உற்பத்தியில் 2ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. நாமக்கல்,  திருவாரூர் மாவட்டங்களில் புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் ரூ. 2 கோடியில் துவங்கப்பட உள்ளது. திருவண்ணா மலையில் ரூ.2.25 கோடியில் இறைச்சிக்கான நவீன கோழி உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே மாணவர்கள் கால்நடை பல்கலைக்கழக கல்லூரிகளில் சேர்ந்து கிராமப் புறங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சி.பாலசந்திரன் வரவேற்றார். கால் நடை பராமரிப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால், பதிவாளர் மா.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: