புதுதில்லி, ஜூலை 25-

“ஆந்திராவுக்கு அளித்திட்ட வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். ஆந்திர மக்களை ஏமாற்றக்கூடாது,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மாலை ஆந்திரப்பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம் தொடர்பாக குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:

“இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமான ஒன்று. இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. இந்தப் பிரச்சனை காரணமாக சென்ற கூட்டத்தொடரையே நாம் இழந்திருக்கிறோம். தெலுங்கு தேசம் கட்சி இதனை எழுப்பியது. அப்போது அக்கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் அங்கமாக இருந்தது.

ஆந்திரப் பிரதேசம் மறுசீரமைப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பிரச்சனைக்காக பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து இறந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாய் இருந்த காலத்தில், எங்கள் மாபெரும் தலைவரான பி.சுந்தரய்யா தலைமையின்கீழ் “விசாலா ஆந்திரா” என்னும் முழக்கத்தை முன்வைத்து இயக்கம் நடந்தது. இந்த முழக்கத்தை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே எழுப்பினார்கள். பின்னர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அதனை 1956இல் அமல்படுத்தினார். இது வரலாறு. நீங்கள் வரலாற்றை துடைத்து அழித்துவிட முடியாது.

இன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணி கிடையாது. அது இன்றையதினம் பாஜக மட்டும்தான். சிவ சேனைக் கட்சி அதிலிருந்து விலகிவிட்டது. தெலுங்கு தேசம் விலகிவிட்டது. இப்போது ஐக்கிய ஜனதா தளமும் அரசாங்கத்தைக் கண்டனம் செய்திருக்கிறது. (குறுக்கீடுகள்)

இந்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது இப்போது பாஜகவின் பொறுப்பாகும். எனக்கு தெலுங்கின் அருமை பெருமைகள் தெரியும். மகாகவி பாரதியார், ‘சுந்தரத் தெலுங்கு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றையதினம், அவர்கள் நம்மின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். இன்றைக்கும் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட தெலுங்கு பேசும் மக்கள் சென்னையில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கத் தெரிவித்துக் கொள்வேன். நம்முடைய மாநிலங்களவைத் தலைவர் சென்னை வரும்போது, போட் கிளப்பில்தான் நடைபயிற்சி மேற்கொள்கிறார்., நான் அவரை அங்கே சந்திப்பது வழக்கம்.   அவரும் தமிழகத்தின் ஒரு பகுதிதான்.

தேஜகூட்டணி, தெலுங்கு தேசக் கட்சியைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. அவ்வாறே நான்கு ஆண்டு காலம் பயன்படுத்திக்கொண்டது. இப்போது அவர்களைச் சாக்கடையில் தூக்கிப் போட்டுவிட்டீர்கள். (குறுக்கீடுகள்). இதுதான் நிலைமை. உங்களை எவரும் இன்றையதினம் பின்பற்றவில்லை. நம் பிரதமர் திருப்பதி, நெல்லூர், அமராவதி ஆகிய இடங்களில் என்ன பேசினார் என்று பேராசிரியர் ராம் கோபால் யாதவ் ஏற்கனவே கூறிவிட்டார். அதனை நான் திரும்பவும் கூற விரும்பவில்லை. ஆனால், பிரதமருக்கு ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன்.

அவர் கடவுள் நம்பிக்கையாளர். நான் ஒரு மார்க்சிஸ்ட். திருப்பதியில் வெங்கடாசலபதி இருக்கிறார், பத்மாவதி அம்மாள் இருக்கிறார். அந்தக் கோவிலின்முன்பாக அவர் உறுதி  அளித்திருக்கிறார். நீங்கள் நம்பும் கடவுள் முன்பு அளித்திட்ட உறுதிமொழியை நீங்கள் அமல்படுத்தாவிட்டால், பின் நாட்டு மக்கள் உங்களை எப்படி நம்புவார்கள்? ஏன் உறுதிமொழிகளை அளிக்கிறீர்கள்?  ஆந்திர மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளை ஏன் அமல்படுத்தவில்லை? ஐந்து கோடி ஆந்திரர்கள் இருக்கிறார்கள். இது ஒன்றும் எளிதான விஷயம் அல்ல. நீங்கள் இப்போது ஐந்து கோடி மக்களை ஏமாற்றுவீர்களேயானால், பின்னர் 125 கோடி மக்களையும் ஏமாற்றுவீர்கள். நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்..

இது ஆந்திராவின் அரசியல் அல்ல. இது இந்தியாவின் அரசியல். எனவேதான், அனைத்து நண்பர்களுமே இப்பிரச்சனை காரணமாக, தாங்களும் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பேசினார்கள். நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டிலுள்ள நாங்களும் இதனை மிகவும்  ஆழமாக உணர்கிறோம்.

ஜல்லிக்கட்டு பிரச்சனை வந்தபோது நீங்கள் எங்களை உதாசீனம் செய்தீர்கள். காவேரி பிரச்சனை வந்தபோது, நீங்கள் எங்களை பல ஆண்டுகாலமாகவே உதாசீனம் செய்தீர்கள். இப்போது கடந்த நான்கு ஆண்டு காலமாகவும் உதாசீனம் செய்தீர்கள். இப்போது “நீட்” பிரச்சனை. உங்களின் சிபிஎஸ்இ தவறு செய்திருக்கிறது. 24 ஆயிரம் தமிழர்களுக்கு இது தெரியும்.  நீங்கள் எங்களுக்கு உதவ வில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம். தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள். இப்போது பழியை மற்றவர்கள்மீது போடுகிறீர்கள். “தமிழ்நாட்டிற்கு மொழிபெயர்ப்பு வசதியைக் கொடுத்திருக்கிறோம்,” என்கிறீர்கள். இவ்வாறு பிறர்மீது பழியைத் தூக்கிப்போட்டுவிட்டு தப்பித்துக்கொள்ளாதீர்கள்.  பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்து, ஜிஎஸ்டி வரி தொடர்பாக கேரள நிதியமைச்சரும், பஞ்சாப் நிதியமைச்சரும், ஜிஎஸ்டி அமலாக்கம் திருப்திகரமாக இல்லை என்று அரசாங்கத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் இங்கே இருக்கிறார். அவர் இதனைக் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தயவுசெய்து ஆந்திர மக்களை ஏமாற்றாதீர்கள். இதுவே  என் வேண்டுகோள்.”

இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் பேசினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.