தருமபுரி,
சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 24 அன்று துவங்கி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் கூறியதாவது:-மோட்டார் வாகன சட்டத்தை திருத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும், லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டிருப்பதாக கூறும் மாநில அரசு, உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்.

சென்னை-சேலத்திற்கு ஏற்கனவே, மூன்று சாலைகள் உள்ளதால் ஆயிரம் கோடி 8 வழிச் சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பணத்தை விரையம் செய்வது தேவையற்றது. சாலை பிரச்சனை, தூத்துக் குடி பிரச்சனைகளைத் தொடர்ந்து ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, ஒகேனக்கல்லில் கூட்டம், பொதுக் கூட்டம் நடத்தினால் சாலை ஓரங்களில் கொடி கட்டுவது வழக்கம். சாலை ஓரம் கட்டிய கொடியைக்கூட காவல் துறை அகற்றியுள்ளது. ஜனநாயக உரிமையை பாதுகாக்க சிஐடியு போராட்டம் நடத்தும் என்றும் சொத்துவரி 100 விழுக்காடு உயர்த்தும் முடிவை மாநில அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடைபெற்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி, தொழிலாளர்களின் உரிமை, விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 12 மணிக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆகவே சுதந்திரம் கிடைத்த அந் நாளை சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்க்கும் நாளாக ஆகஸ்ட் 14 அன்று இரவு, சுதந்திரத்தை பாதுகாத்த தலைவர்களின் கனவை சிதைக்காதீர்கள், வேலை வாய்ப்பு வழங்கு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து என வலியுறுத்தி தொழிற் சங்கத்தினர் விடிய விடிய போராட்டம் நடத்த உள்ளோம்.செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் தமிழகத்திலிருந்து திரளாக பங்கேற்க உள்ளோம். பரிசல் ஓட்டிகளுக்காக போராட்டம் ஒகேனக்கல் அருவியை நம்பி பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், சமையல் தொழில் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலினை நம்பி உள்ளன. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அவர்களது நியாயமான கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றக்கோரி அமைச்சரை சந்திக்க உள்ளோம். அப்போதும் நிறைவேற்றவில்லை என்றால் மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சவுந்தரராசன் தெரிவித்தார். பேட்டியின் போது சிஐடியு மாநிலதுணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், தலைவர் ஜி.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.