லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.டி-20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றிய நிலையில்,5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.இந்நிலையில் ஒருநாள், டி-20 ஆட்டங்களில் சிறப்பாகப் பந்து வீசி,நல்ல பார்மில் சுழன்று வரும் குல்தீப் யாதவ் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் முதன்முறையாக களமிறங்குகிறார்.

ஏற்கெனவே டெஸ்ட் தொடரில் சிறப்பான பார்மில் உள்ள அஸ்வின்- ஜடேஜா கூட்டணியில் யாரையாவது ஒருவரைப் புறந்தள்ளிவிட்டு குல்தீப் யாதவை முதன்மைத் சுழற்பந்து வீச்சாளராகக் களமிறக்க கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அஸ்வின் – ஜடேஜாவை ஓரங்கட்டிவிட்டு குல்தீப் யாதவ் முதன்மைத் தேர்வாக தேர்ந்தெடுப்பது,இந்திய கிரிக்கெட்டில் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மேலும் கூறியதாவது,”குல்தீப் யாதவ் திறமையான வீரர்தான்.ஆனால் அஸ்வின், ஜடேஜாவிற்கு முன்னுரிமை அளிக்காமல் குல்தீப் யாதவை அணியில் சேர்க்க நான் நூறுமுறையாவது யோசிப்பேன்.இது ஒருபுறம் இருக்க குல்தீப் யாதவ் திடீரென முதன்மைத் தேர்வாக தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட்டில் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்.மெதுவான ஆடுகளத்தில் குல்தீப் யாதவால் பந்தை அவ்வளவு எளிதாக திருப்ப முடியாது.ஜடேஜா மெதுவான ஆடுகளத்தில் அற்புதமாகப் பந்து வீசும் திறன் படைத்தவர். இந்திய அணி இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டு ஆடுவதாக இருந்தால் குல்தீப் யாதவ், இரண்டாவது வீரராகவே இருக்கவேண்டும்.ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளர் என்று சொல்லி குல்தீப்பைத் களமிறக்கினால் கடும் சிரமத்தைச் சந்திக்க வேண்டிவரும்.அஸ்வினிடம் மெதுவான ஆடுகளத்தில் “ஷாட் பிட்ச்” பிரச்சனை இருப்பதால்,முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா – குல்தீப் ஜோடியைக் களமிறக்கலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.