மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் திருப்பி அனுப்பியது குறித்து ஊடகங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

சமூக ஊடகங்களில் சிலர், தமிழகத்தையே நிர்மலா சீத்தாராமன் அவமதித்து விட்டதாக கோபப்படுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் ஒன்றும் தமிழகத்தினுடைய கோரிக்கைகளுக்காக தில்லிக்கு செல்லவில்லை. சிக்கலில் சிக்கியுள்ள அவர், உதவி கேட்டுத்தான் தில்லிக்கு காவடி தூக்கியிருக்கிறார். இப்படி அவமானப்படுவது அவருக்கு ஒன்றும் புதிதல்ல. அதிமுகவில் சேர்ந்த காலத்திலிருந்து அவரைப் போன்றவர்கள் அனுபவிக்கும் ஒன்றுதான் இது. ஓ.பன்னீர்செல்வத்தை வெளியில் உட்காரவைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான மைத்ரேயனை மட்டும் உள்ளே அழைத்து பேசியிருக்கிறார் நிர்மலா. மைத்ரேயன் அதிமுகவில் இருந்தாலும் பாஜகவை சேர்ந்தவர்தான். அந்தக் கட்சியின் ஸ்லிப்பர்செல் தான் அவர். சொந்தக் கட்சிக்காரருக்கு நிர்மலா இந்த சலுகையை கூட அளிக்கக் கூடாதா?

நிர்மலாவால் அவமதிக்கப்பட்டு சென்னை திரும்பிய ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் “எதையும் தாங்கும் இதயம்வேண்டும் என்று எங்களுக்கு அண்ணாகற்றுத் தந்திருக்கிறார்” என்று தன் இதயத்தின் ஆழத்தை திறந்து காட்டியிருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று கூட அண்ணா சொல்லியிருக்கிறார். இப்படியெல்லாம் தன்னுடைய வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்று தெரிந்திருந்தால் அண்ணா அப்படி சொல்லியிருக்கவே மாட்டார். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூட அண்ணா கூறினார். இந்த மல்லிகைகள் மலர்வதே அடுத்த வீட்டுத் தோட்டத்தில்தான்.  ஓபிஎஸ் தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக செல்லவில்லை. மாறாக பாஜகவின் செல்லப்பிள்ளை நானே என எடப்பாடிக்கு எடுத்துச் சொல்வதற்காகவே சென்றார்.

போன இடத்தில் கொஞ்சம் அசிங்கப்பட்டுவிட்டார். ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று கூறுவதற்கு பதிலாக எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக கூறியிருக்கிறார். இதயம் என்று ஒன்று இருப்பதே பெரிய விசயம்தான்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்த பிரதமரை தமிழக அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி வரை பிரதமர் மோடி இதற்கு நேரம் ஒதுக்கவே இல்லை. அப்போதும் தமிழக ஆட்சியாளர்களுக்கு கோபம் வரவில்லை. அப்போது வராத கோபம் இப்போது வரப்போகிறதா?  இதில் கவலைப்படவேண்டியதும் கவனம் கொள்ள வேண்டியதுமான விசயங்கள் நிறைய இருக்கின்றன. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உடன் பிறந்த தம்பி பாலமுருகன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உடனடியாக சென்னைக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சாதாரண பொது மக்கள் என்றால் ஆம்புலன்ஸ் கிடைப்பதே அதிசயம்தான். ஆனால் துணை முதல்வரின் தம்பியாயிற்றே? இவர் நிர்மலாவிடம் பேச, அவர் உடனடியாக ராணுவ விமானத்தை அனுப்பி வைக்க பாலமுருகன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

ஒக்கிப்புயலின் போது கடலில் சிக்கி ஆயிரக்கணக்கான மீனவர்கள் உயிருக்கு போராடிய போது ராணுவ விமானத்தை அனுப்புவதற்கு பெரும் தாமதம் ஏற்பட்டது. அப்படியெல்லாம் நினைத்தவுடன் அனுப்பி விட முடியாது; நிறைய விதிகள் இருக்கிறது என்று இதே நிர்மலாதான் வியாக்கியானம் செய்தார். அப்போது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு தமிழக மீனவர்கள் ஏராளமானவர்களை காப்பாற்றியது.  ஒக்கி புயலின் போது மீனவர்களை காப்பாற்ற பறந்து வராத ராணுவ விமானம் ஓபிஎஸ் தம்பிக்கு வந்தது எப்படி? அப்படி அனுப்பும் அதிகாரம் நிர்மலாவுக்கு உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நிர்மலா வகையறாவுக்கு உண்டு. இந்த விசயத்தை ஓபிஎஸ் மற்றும் நிர்மலா தரப்பு கமுக்கமாக வைத்திருக்க, எடப்பாடி தரப்புதான் போட்டு கொடுத்திருக்கிறது. ஓபிஎஸ் எதற்காக தில்லி போனார் என்று எடப்பாடியிடம் கேட்க, தனது தம்பியை காப்பாற்றிய நிர்மலாவுக்கு நன்றி சொல்ல போயிருக்கிறார் என்று அவர் கூற, வேறுவழியின்றி ஓபிஎஸ் அதற்காகத்தான் போனேன்என ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று.  கமுக்கமாக நடந்த ஒரு விசயம் வெளியே வந்துவிட்டதால்தான் நிர்மலா கோபமாகி ஓபிஎஸ்சை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விமானம் விவகாரம் இடையில் கசிந்ததுதான்.

ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் இன்னமும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்கின்றன. ஓபிஎஸ் அவமதிக்கப்பட்ட அடுத்தநாள் எடப்பாடி கோஷ்டியை சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வகையறா தில்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து உரையாடியிருக்கிறது. ஆளாளுக்கு கையில் ஒரு பேப்பரோடு போகிறார்கள். அங்கு போய் வாயால் என்ன பேசுகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். நம்பிக்கையில்லா தீர்மானம் வரவிருந்த நிலையில், எடப்பாடி சம்பந்தி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனை அவருக்கு விடப்பட்ட எச்சரிக்கை. அந்த கோஷ்டியும் சரணாகதி அடைந்துவிட்டது. மறுபுறம் ஓபிஎஸ் தர்மயுத்தம் துவங்கிய போது காதில் பகவத் கீதையை ஓதியதே பாஜகதான். அப்போது ஊதப்பட்ட சங்கின் ஒலி இன்னமும் ஓபிஎஸ் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கும். மோடி சொன்னதால்தான் துணை முதல்வர் பதவியேற்றேன் என்று அவரே ஒப்புக் கொண்டார். இப்போது அவமதித்ததும் அவர்களே.  பெரும் ஊழலில் சிக்கியுள்ள ஓபிஎஸ் மத்திய ஆட்சியாளர்களின் தயவில்தான் தப்பித்துக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் கோபப்பட முயற்சித்தாலும் ஆபத்து தனக்குதான் என்பதை அவர் அறிவார். எனவே என்னதான் உசுப்பிவிட்டாலும் தர்மயுத்தம், மவுன விரதம் எதற்கும் வாய்ப்பில்லை. எதையும் தாங்கும் இதயத்தை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

மறுபுறத்தில் எடப்பாடி வகையறாவுக்கும் சம்பந்த உறவு இருக்கிறது. அது சம்பந்தமான சோதனை தொடர்ந்தால் சிக்கல்தான். எனவே பாஜகவுக்கு பயந்து நடுங்குவதில் முதலிடத்தை பிடிக்கப் போவது யார் என்பதுதான் இப்போதைய போட்டி. தற்போதைக்கு இருவரும் சமநிலையில் இருக்கிறார்கள். போட்டி முடிவடையும் போது இவர்கள் ஆட்சி இருக்காது.

Leave A Reply

%d bloggers like this: