சென்னை,

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமுஎகசவின்  மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்துகொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டி விடுவதற்கென்றே சங்பரிவாரம்
பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஜனநாயகப்பண்பற்ற சகிப்பின்மை குண்டர்கள், விமர்சிப்பவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அச்சுறுத்துவது, அவதூறு செய்வது, தாக்குவது, கொன்றொழிப்பது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி பின்வாங்கச் செய்வது உள்ளிட்ட இழிவான வழிகளை கைக்கொண்டுள்ளனர். பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு குறித்த விவாதத்தில் கவிதையொன்றை மேற்கோள் காட்டியதற்காக ஊடகவியலாளர் கார்த்திக்கேயன் இவர்களது கடுமையான அவதூறுகளுக்கும் மிரட்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதேவிதமான நிலையை ஆண்டாள் குறித்த கட்டுரையொன்றில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளுக்காக எழுத்தாளர் வைரமுத்துவும் எதிர்கொள்ள நேரிட்டது. இப்போது கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ஹரிஷ் அவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் இதன் தொடர்ச்சிதான். மாத்ருபூமி வார இதழில் தொடராக வெளியிடப்பட்டுவந்த அவரது ‘மீசை’ என்ற நாவலின் உள்ளடக்கத்திற்காக அவரது கைகளை வெட்டிவிடப்போவதாக யோக ஷேம சபா என்கிற அமைப்பினரால்
மிரட்டப்பட்டுள்ளார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் இழிவுபடுத்தும் பல்வேறு அவதூறுகளை சமூக வலைத்தலைங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதனால் கடும் மன உளைச்சலுக்காளான ஹரிஷ் தனது நாவலை திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அவரை இந்த முடிவுக்கு நெட்டித்தள்ளிய சகிப்பின்மை குண்டர்களுக்கு எதிராக நாடெங்குமிருந்து ஒலிக்கும் கண்டனத்தில் தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைகிறது. மக்களாட்சி மாண்புகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்கும் போக்கினை அனுமதிக்க முடியாதென்றும் எழுத்தாளர் ஹரிஷ் தனது படைப்பாக்கப் பணியைத் தொடர்வதற்குரிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. அவரது கருத்துரிமைக்காக திரண்டுள்ள ஆதரவினால் உத்வேகம் பெற்று ஹரிஷ் தனது எழுத்துப்பணியை முன்னிலும் காத்திரமாக தொடர வேண்டும் என தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.