திருவள்ளூர்,
திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பெரிய எடப்பாளையம் பகுதியில் ஆரிய வைசிய தென்முக, வடமுக செட்டியார் சங்கத்துக்குச் சொந்தமான சுமார் 4.20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்தனர்.

ஓட்டு வீடும், தற்போது கட்டிடம் கட்டியும்  வசித்து வருகின்றனர். அவர்களை அகற்ற வேண்டும் என்று அச்சங்கத்தினர் திருவள்ளூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அண்மையில் அந்த குடியிருப்புகளின் மின் இணைப்புகளை துண்டிக்கவும், குறுகிய காலத்தில் வீடுகளை இடித்து அகற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி நீதிமன்ற ஊழியர்கள் முன்னிலையில் மின்வாரிய ஊழியர்கள் ஆக்கிரமிப்பு என்று கூறப்படும் வீடுகளில் செவ்வாயன்று (ஜூலை 24) மின் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் மொத்தமாக ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். கடைசியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்ற ஊழியர்கள் முற்பட்ட போது மக்களுக்கும் ஊழியர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் காவலர்கள் தகராறில் ஈடுபட்ட பெண்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சரஸ்வதி என்ற பெண்ணை பெண் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த பெண்ணை மீட்டு உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காலம், காலமாக வசித்து வந்த வீட்டை தங்களுக்கே வழங்கக் கோரியும் காவல்துறை அராஜகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் என்.கீதா மற்றும் குடியிருப்பு வாசிகள் கூறுகையில், நாங்கள் கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உட்பட அரசின் அத்தனை ஆவணங்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருவதாலும், வேறு வாழ்வாதாரம் இல்லாததாலும் வீட்டு மனைகளை தங்களுக்கே சொந்தமாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.