கடலூர்,
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடந்த 7 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க சங்க நிர்வாகிகள் முயற்சித்து வருகின்றனர்.  கடந்த 18 ஆம் தேதியன்று ஆட்சியரை சந்தித்திட முன் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால் ஆட்சியர் மாவட்ட நிர்வாகிகளை ஆட்சியர் சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர். ஆனால் அவர் அதிலுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியரை சந்திக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ஆட்சியர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் அவரின் காரை சூழ்ந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தினர் மாவட்டத் தலைவர் பா.மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மு.ஆறுமுகம், பொருளாளர் கு.ஜான்பிரிட்டோ, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலர் என்.ஜனார்த்தனன், மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், மாவட்ட செயலாளர் எல்.அரிகிருஷ்ணன், பொருளாளர் டி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோவிந்தராஜன், சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஆட்சியருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என சங்கத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரையும் தனது அறைக்கு அழைத்து ஆட்சியர் வே.ப.தண்டபாணி பேச்சுவார்த்தை நடத்தினார்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டதாகவும், அதனால், போராட்டத்தை விலக்கிக் கொண்டதாகவும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.அரிகிருஷ்ணன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: