சேலம்,
திரிபுரா மற்றும் மேற்கு வங்கமாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் நிகழ்த்தப்படும் ஜனநாயக படுகொலைகளை கண்டித்து சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது முன்னணியின் ஊழியர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொன்று குவித்து வருகின்றனர். இதேபோல், திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சியினரின் அலுவலகங்களை சூறையாடி வருவதுடன் கட்சி ஊழியர்களை படுகொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய ஜனநாயக விரோத சம்பவங்களையும், படுகொலைகளையும் கண்டித்து செவ்வாயன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. இதன்ஒருபகுதியாக, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர மேற்கு செயலாளர் எம். கனகராஜ், சேலம் தாலுகா செயலாளர் சுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேலு, வி.கே.வெங்கடாச்சலம், எம்.குணசேகரன், எ.ராமமூர்த்தி, எஸ்.கே.சேகர், எ.முருகேசன் உள்ளிட்ட மாவட்டசெயற்குழு, மாவட்டக்குழு, இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: