திருநெல்வேலி,
நெல்லையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு கோரி மாஞ்சோலை தேயிலைதோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது அவர்களை நோக்கி காவல்துறை தடியடி நடத்தினர்.

இதில் தொழிலாளர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களை காவல்துறையினர் தாமிரபரணி ஆற்றுக்குள் விரட்டி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட 17 பேர் இறந்தனர். இதில் அன்றைய சிபிஎம் மாவட்டச் செயலாளராக இருந்த வீ.பழனி உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், இறந்தவர்களின் நினைவாக வருடந்தோறும் தாமிரபரணி ஆற்றில் பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சம்பவம் நடந்த கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாஞ்சோலை தொழிலாளர் நினைவு தினமான திங்களன்று மாலையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் ஆற்றில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, எம். சுடலைராஜ், சிறீராம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் வரகுணன், வேல்முருகன், கு.பழனி, சிஐடியு மாவட்ட பொருளாளர் வண்ணமுத்து உட்பட ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.