கோவை,
நூறு நாள் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை வேறு வகையில் செலவிடக்கூடாது, கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல்படுத்தப்படாமல் உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.600 கோடி பணத்தை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்தும், அந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட நோக்கங்களை விளக்கிசங்க நிர்வாகிகள் ஆர்.கேசவமணி, என்.வி.தாமோதரன், பெருமாள் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மவட்டத் தலைவர் எ.துரைசாமி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கே.எ.பட்டீஸ்வரமூர்த்தி, தாலுகா செயலாளர் பி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.எஸ்.பரமசிவம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் பி.திருமலைசாமி, மாவட்ட துணைச் செயலாளர் கே.மகாலிங்கம், தாலுகா தலைவர் பி.ஆனந்தராஜ், ஒன்றிய பொருளாளர் ஆர்.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.தங்கவேல் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் சி.துரைசாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜி.கணபதி கண்டன உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் வி.கே.வெங்கடாச்சலம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் ஆர்.குழந்தைவேல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி.கந்தசாமி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு
ஈரோடு வீராப்பசத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டசெயலாளர் சண்முகவள்ளி தலைமை வகித்தார். மாநில உதவித் தலைவர் பி.சுப்பிரமணி, மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் என்.நாகராஜன், தாலுகா நிர்வாகிகள் இளங்கோ, கனகவேல், சசி, சிவலிங்கம் உட்படபலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

நாமக்கல்:
நாமக்கல் பூங்கா சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் வீ. சதாசிவம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் என்.ஜோதி துவக்க உரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மாவட்ட குழு உறுப்பினர் குப்பண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.