கோவை, ஜூலை 24 –

நூறு நாள் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியை வேறு வகையில் செலவிடக்கூடாது, கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி கோவையில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறு நாள் வேலை திட்டம் கடந்த 7 மாதங்களாக செயல் படாமல் உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பணத்தை  மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கட்டிடம் கட்ட சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழக அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை ரத்து செய்ய வேண்டும், கிராமப்புற மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.கேசவமணி, என்.வி.தாமோதரன், பெருமாள் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.