தூத்துக்குடி
தூத்துக்குடியில் கடந்த மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிய மக்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி,துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த மக்கள் பொது விசாரணை குழு அறிக்கை தூத்துக்குடி நற்செய்தி நடுவத்தில் ஜூலை 22 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கோபால கவுடா அறிக்கையை வெளியிட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வழக்கறிஞர் ஹென்றிதிபேன் உட்பட பலர் கலந்து கொண்டனர் இதில் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையின் சாராம்சம்: நடைபெற்ற ஒரு கொடுமையான சம்பவத்தைப் பற்றி விசாரித்த ஒரு அறிக்கையை வெளியிடுகின்ற நிகழ்ச்சி தான் இது. இதற்கே எவ்வளவு தடைகள். இதுவரை இரண்டு இடங்கள் மாற்றப்பட்டு இது மூன்றாவது இடத்தில் நடைபெறுகிறது. ஒரு இடத்தில் அனுமதிக்க வேண்டும் என்றால் காவல்துறையினர் பல கேள்விகளை கேட்கிறார்கள். அதற்கு தேவையான ஆவணங்கள் இருந்தால் நீங்கள் கூட்டத்தை நடத்தலாம் என கூறினார்கள். இப்படிப்பட்ட கேள்விகளை ஸ்டெர்லைட் நிறுவனத்தை பார்த்து கேட்டிருந்தால் இந்த கூட்டமே நடைபெறுவதற்கு தேவை எழுந்திருக்காது. ஸ்டெர் லைட் நிறுவனத்தைப் பார்த்து கேள்வி கேட்கிற தைரியம் அரசுக்கும் காவல்துறைக்கும் இருக்கிறதா?.

அடக்குமுறைக்கு எதிராக நீங்கள் அடக்குமுறைகளை ஏவ ஏவ அதை எதிர்க்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கும். ஒருபோதும் மக்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டார்கள். காவல்துறையும், அரசாங்கமும் நடைபெற்ற சம்பவத்தை மண் போட்டு மூட நினைத்தாலும், எவ்வளவு தடை உத்தரவு போட்டாலும், நீங்கள் தூத்துக்குடியில் அரங் கேற்றிய அந்த படுகொலைகளை உங்களால் மறைக்க முடியாது. இந்த விசாரணை அறிக்கை இன்றைக்கு மட்டுமல்ல, இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உண்மையை எடுத்து சொல்லும் ஆவணமாக திகழும். உங்கள் கையில் இருக்கும் துப்பாக்கிகளை விட, இந்த விசாரணை அறிக்கையை எழுத பயன்படுத்தப் பட்ட பேனாக்கள் வலிமையானது. துப்பாக்கியால் நீங்கள் ஒருமுறை தான் சுட முடியும். ஆனால், இந்த பேனாக்கள் நினைத்தால் உங்களுடைய அதிகாரத்துக்கு சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கும். வழக்கறிஞர் சுப்புமுத்துராமலிங்கம் உட்பட தூத்துக்குடியில் உள்ள வழக்கறிஞர்கள் அனைவருக் கும் மனமார்ந்த பாராட்டுக்கள். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் – பாதிக்கப்பட்ட மக்கள் மீதே சுமார் 2 ஆயிரம் வழக்குகள் போட்டனர். இந்த வழக்குகளுக்கு எந்த வித கட்டணமும் வாங்காமலே வழக்குகள் நடத்தி பலருக்கும் நமது வழக்கறிஞர்கள் ஜாமீன் பெற்றுத்தந்துள்ளனர். கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினர். காவல்துறையும் அரசாங்கமும் எவ்வளவு அதிகாரத்தைச் செலுத்தினாலும், வழக்கறிஞரின் வாதத்திற்கு பதில் சொல்ல முடிந்ததா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஜூன் 3ஆம் தேதி வந்தார். அப்போது நாங்கள் பொதுக்கூட்டத் திற்கு அனுமதி கேட்டோம். நீங்கள் மறுத்தீர்கள். மீண்டும் ஜூன் 18ஆம் தேதி அகில இந்திய தலைவர் பிருந்தாகாரத் வந்தார். அப்போதும் அனுமதி மறுத்தீர்கள். மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மூலம் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று பொதுக் கூட்டத்தை நடத்தினோம். காஷ்மீரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அனுமதிப்பது போல் ஏகப்பட்ட விதிகளுடன் தூத்துக்குடியில் நடத்த அனுமதி அளித்தீர்கள். பொதுக் கூட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே பேச அனுமதி என கூறினார்கள். பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, மாவட்டச் செயலாளரிடம் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு காவல்துறை அனுமதிக்கிறார்கள். இந்தியாவில் சுதந்திரம் இல்லையா?

தூத்துக்குடி என்ன தனி நாடா? இங்கு என்ன முடி மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகிறது? அடக்குமுறை செய்து மனிதர் களை அடக்கிவிட முடியும் என்றால் இந்த நாட்டிலே வஉசி தோற்றிருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் தோற்றிருக்க வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்திருக்க முடியாது. வெள்ளைக்காரனே தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கிற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கும். அவனிடம் இல்லாத ஆயுதங்களா உங்களிடம் இருக்கிறது? அந்த ஆயுதங்களையே எதிர்த்துப் போராடிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் தூத்துக்குடி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தற்போது பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க கூடாது என மனு சமர்ப்பித்து அந்த மனுவை பசுமை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய போகின்றன? இந்த இரண்டு அரசுகளை பற்றி நன்றாக தெரியும். அந்த அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமத்துடைய நிரந்தர நன்கொடையாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி. அவர்கள் வாங்கிய நன்கொடையை மறைப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டத்தையே திருத்தி தங்களை பாதுகாத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றைக்கு ஆட்சியில் உள்ளனர்.

இவ்வளவு கொடிய சம்பவங்கள் நடந்துள்ளதே, இதுவரை ஏதாவது ஒரு காவல்துறை அதிகாரி மீது ஒரு நோட்டீஸ் உண்டா, ஒரு குற்றப்பத்திரிகை உண்டா, ஒரு அதிகாரியாவது சஸ்பெண்ட் செய்யப்பட்டதுண்டா? இவ்வளவு கொடுமைகளுக்கு காரணமான இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை நாங்கள் ஏற்கெனவே பல சட்டப் போராட்டங்களை நடத்தி வருகின் றோம். பல இயக்கங்களை நடத்தி கொண்டிருக்கிறோம், எனவே இந்த சட்டப் போராட்டம், மக்கள் போராட்டம் மூலம் எத்தனை எடப்பாடிகள் வந்தாலும், அவர்கள் மண்ணைக் கவ்வுகிற அந்த வரலாற்று நிகழ்வை நாம் நடத்தி காட்டுவோம்.

Leave A Reply

%d bloggers like this: