திருப்பூர்,
திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத்தின் சார்பில் 14ஆவது “கன்ஸ்ட்ரோ மெகா 2018” கட்டிட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி வித்யா கார்த்தி மண்டபத்தில் ஜூலை 27 முதல் 30 ஆம் தேதி முடிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

திருப்பூர் மங்கலம் சாலை கே.என்.எஸ்.கார்டனில் உள்ள சிவில் இன்ஜினியர்கள் சங்க அலுவலகத்தில் செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சங்கத் தலைவர் சிவன் பாலசுப்பிரமணியம், கண்காட்சித் தலைவர் தணிகவேல், கண்காட்சி செயலர் வீ.ராஜமாணிக்கம் மற்றும் சங்கச் செயலர் சௌ.ஸ்டாலின்பாரதி ஆகியோர் இக்கண்காட்சி குறித்து விளக்கினர். திருப்பூர் தாராபுரம் சாலை வித்யா கார்த்தி மண்டபத்தில் குளிரூட்டப்பட்ட அரங்கில் இக்கண்காட்சிக்கு மொத்தம் 136 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னணி பிராண்ட் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்பட மொத்தம் 110 வர்த்தகர்கள் பங்கேற்று தங்கள் கட்டுமானப் பொருட்கள், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றனர். கட்டுமானத் தொழிலில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நவீன வடிவமைப்புகள் இடம் பெறும். குறிப்பாக ஜெர்மன் நாட்டின் நவீன மாடுலர் கிட்ச்சன், ஆட்டோமேட்டிவ் பில்டிங் டோர் உள்ளிட்டவை புதிதாக இடம்பெறுகின்றன.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை தற்போதுள்ள காங்கிரீட் கட்டிடங்களின் பராமரிப்பு குறித்து வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர். அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இந்த வளாகத்திலேயே அரசு அலுவலர்கள் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நிலஅளவைத் துறையின் சாதனைகள், வளர்ச்சி பற்றிய கண்காட்சியும் உடன் நடைபெறுகிறது. திருப்பூர் பொறியாளர் நல அறக்கட்டளை சார்பில் இலவச ரத்த, கண் பரிசோனை சிகிச்சை முகாம், சித்தா, ஆயுர்வேத, ஹோமியோ, யுனானி உள்ளிட்ட இயற்கை மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், இலவச மரக்கன்றுகளும் வழங்கப்படும். ஊனமுற்றோருக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெறும். தினமும் மாலை கிராமிய கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறும்.

வெள்ளியன்று காலை மேகாலயா மாநிலம் அம்பத்தி மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கும், திருப்பூர் மண்ணைச் சேர்ந்த சா.ராம்குமார் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். கண்காட்சி சிறப்பு மலரை சார் ஆட்சியர் ஷர்வண்குமார் வெளியிட, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் பெற்றுக் கொள்கிறார். இக்கண்காட்சியில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். திருப்பூர் மட்டுமல்லாது கரூர், ஈரோடு, உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் உள்பட சுற்று வட்டார ஊர்களில் இருந்ததும் 50 ஆயிரம் பார்வையாளர்கள் வருவார்கள், ரூ.2 கோடி வரை வர்த்தக விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசும், சிறந்த அரங்கு அமைப்பாளருக்கு கண்காட்சி முடிவில் பரிசும் வழங்கப்படும். பிளாஸ்டிக் ஒழிப்பின் பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை தரப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சிவில் இன்ஜினியர்கள் சங்க கண்காட்சிப் பொருளாளர் எம்.மோகன்ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: